வீங்கிய தலை, குச்சி போன்ற கால்கள், உயரம் அதிகரிப்பு (விண்வெளியில் புவியீர்ப்பு விசை இல்லாததால் முதுகெலும்பு விரிவடைந்து உயரம் 3% அதிகரிக்கும், பூமிக்கு திரும்பிய பிறகு சாதாரண நிலைக்கு திரும்புகின்றனர்) மற்றும் எலும்பு அடர்த்தி குறைவு என பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் புவியீர்ப்பு மாறுபாட்டால் பல்வேறு உடல் உபாதைகளை எதிர்கொள்ளவுள்ளனர்.

இதிலிருந்து மீள அவர்கள் 45 நாள்கள் புவியீர்ப்புக்கு தயாராகும் மறுவாழ்வு திட்டதுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள்…
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்குத் திரும்பும் விண்வெளி வீரர்களுக்கு, சுவாச திறன், தசை வலிமை, உடற்சக்தி, தாங்கும் ஆற்றல், சமநிலை, சுறுசுறுப்பு, உடல் ஒத்திசைவு, புரோபிரியோசெப்சன், நியூரோவெஸ்டிபுலர் செயல்பாடு ஆகியவை பாதிக்கப்படும்.
தரையிறங்கிய உடனேயே எழுந்து நிற்பதுகூட அவர்களுக்கு சவாலானதாக இருக்கும். பொதுவாக விண்வெளி பயணத்துக்குப் பிறகு வீரர்கள் நிற்கவும் சுயாதீனமாக நடக்கவும் சில நாள்களில் இருந்து இரண்டு வாரங்கள் வரைக்கூட ஆகலாம்.

விண்வெளி வீரர்கள் வலிமை மற்றும் கண்டிஷனிங் நிபுணர்கள் (ASCR) இந்த மறுசீரமைப்பு திட்டங்களை நிர்வகிக்கின்றனர். வீரர்களுக்கு ஏற்படும் குறைகளை போக்குவதிலும் அவர்களை பூமியின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப மீண்டும் தயார்படுத்தவும் பணியாற்றுகின்றனர்.
3 கட்ட பயிற்சிகள்
இந்த மறுசீரமைப்பு தரையிறங்கிய அன்றே தொடங்குகிறது. தினசரி 2 மணி நேரம் வீதம் 45 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.
முதல் கட்டமாக நடமாட்டம், தசைகளை வலிமைபடுத்துதல், உடல் நிகிழ்வுத்தன்மைக்காக பயிற்சி அளிக்கப்படும். இரண்டாம் கட்டமாக இதய சீரமைப்பு மற்றும் அசைவுறுப்புகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படும். மூன்றாம் கட்டமாக செயல்பாடுகளை மேம்படுத்த பயிற்சிகள் வழங்கப்படும்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் 9 மாதங்கள் விண்வெளியில் இருந்துள்ளதால் இந்த பயிற்சிகள் அவர்களுக்கு இன்றியமையாததாகவும் அதிக பலன் தருவதாகவும் இருக்கும்.