அதிக குற்றங்கள் நடப்பதாக திட்டமிட்டு வதந்தி: சட்டப்பேரவையில் புள்ளிவிவரத்துடன் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. கடந்த 12 ஆண்டுகளில் 2012-ல் அதிமுக ஆட்சியில்தான் அதிகபட்சமாக 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, தமிழகத்தில் நடந்து வரும் கொலை சம்பவங்கள் குறித்து குற்றம்சாட்டி பேசினார். இதனால், கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. அவர் தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டதால், பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

இதன்பிறகு, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: குற்ற சம்பவங்களே நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. அவற்றில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதுதான் முக்கியம். முந்தைய ஆட்சியில் தூத்துக்குடி, சாத்தான்குளம் போன்ற சம்பவங்களை நீங்கள் மறந்துவிட கூடாது. தவிர, உங்களைப் போல, டிவி பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என்று சொல்ல நாங்கள் தயாராக இல்லை.

கடந்த 19-ம் தேதி தமிழகத்தில் 4 கொலைகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். கோவையில் நடந்தது முதல்கட்டமாக தற்கொலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிவகங்கை கொலை சம்பவத்துக்கு காரணம் குடும்ப தகராறு என தெரியவந்துள்ளது. சேலத்தில் கிச்சிப்பாளையம் சரித்திர பதிவேடு குற்றவாளி செல்லதுரை கடந்த 2020-ல் கொல்லப்பட்ட வழக்கில், 2-வது எதிரியான சாணக்கியனை பழிவாங்கும் நோக்கத்தில் ஈரோட்டில் கொலை நடந்துள்ளதாக தெரியவருகிறது. காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்த கட்சியினராக இருந்தாலும் போலீஸார் பாரபட்சமின்றி, சுதந்திரமாக செயல்பட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குற்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சம்பவங்கள் நிகழ்ந்த பிறகு எடுக்கப்படும் துரித நடவடிக்கைகள் என இரு வகையிலும் காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. குண்டர் சட்டத்திலும் கைது நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. குண்டர் சட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் 4,572 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2023-ல் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட குற்றங்கள் 49,280 ஆக இருந்தது. 2024-ல் அது 31,498 ஆக குறைந்துள்ளது. ஒரே ஆண்டில் 17,782 குற்றங்களை குறைத்திருக்கிறோம்.

சமூக ஊடகங்களில் கொலை குற்றங்கள் தொடர்பான காட்சிகள் வெளிவரும்போது, அதிக எண்ணிக்கையில் குற்றங்கள் நடைபெறுவது போன்ற தவறான கருத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது. உண்மையில், 2024-ல் கொலை குற்றங்கள் 6.8 சதவீதம், அதாவது 109 கொலைகள் குறைந்துள்ளன. பழிவாங்கும் கொலைகளின் எண்ணிக்கை 42.72 சதவீதம் குறைந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதிலும் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. 2023-ல் 181 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கும், 2024-ல் 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கடுங்காவல் தண்டனை உட்பட 242 சரித்திர பதிவேடு குற்றவாளிகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் தண்டனை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகளில் காவல் துறை காட்டிய தீவிர அக்கறையே இதற்கு காரணம்.

கடந்த 2012 முதல் 2024 வரையிலான 12 ஆண்டுகளில், 2012-ல் அதிமுக ஆட்சியில்தான் அதிகபட்சமாக 1,943 கொலைகள் நிகழ்ந்துள்ளன. 2013-ல் இந்த எண்ணிக்கை 1,927. கடந்த 2020-ல் கரோனா காலத்தில் ஊரடங்கு அமலில் இருந்தபோதும்கூட, 1,661 கொலைகள் நடந்துள்ளன. கடந்த ஆண்டுகளின் வரலாறு இவ்வாறு இருக்க, இந்த ஆட்சியில் காவல் துறை மேற்கொண்டு வரும் கடும் நடவடிக்கைகளின் காரணமாக, கடந்த 12 ஆண்டுகளில் 2024-ல்தான் மிகமிக குறைவான எண்ணிக்கையில், அதாவது, 1,540 கொலைகள் மட்டுமே நிகழ்ந்துள்ளன.

குற்றங்களை தடுத்து, மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்து, பொது அமைதியை தொடர்ந்து நிலைநாட்ட எனது தலைமையில் காவல் துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கொன்றும், இங்கொன்றுமாக முன்விரோதம் காரணமாக நடைபெறும் சில நிகழ்வுகளை வைத்து, இந்த அரசு மீது பழி சுமத்தி அரசியல் ஆதாயம் அடைய நினைப்பவர்கள் கடந்த ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு எப்படி சீரழிந்து கிடந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.