அமெரிக்காவில் இந்திய மாணவர் கைது: ஹமாஸ் ஆதரவுக்காக நாடுகடத்தப்பட வாய்ப்பு!

வாஷிங்டன்: பாலஸ்தீன பயங்கரவாத குழுவான ஹமாஸ்களுடன் தொடர்பில் இருந்ததாகவும், அவர்களின் கொள்கைகளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகவும் இந்திய மாணவர் ஒருவரை அமெரிக்க அரசு கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இந்திய மாணவரான பதர் கான் சூரி ஜார்ஜ்டவுன் பல்கலை.யில் படித்துவருகிறார்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு பதர் கான் தீங்கு விளைவிப்பதாக கருதி அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் அவரை நாடு கடத்த முயல்வதாக பதர் கான் சூரியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “பதர் கானை வெர்ஜினியாவின் ரோஸ்லினில் உள்ள அவரின் வீட்டில் வைத்து மத்திய புலனாய்வு நிறுவனத்தினர் கைது செய்தனர். தற்போது அவர், லூசியனாவின் அலெக்ஸாண்ட்ராவில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். குடியுரிமை நீதிமன்ற விசாரணை தேதிக்காக காத்திருக்கிறார்.” என்றார். இதனிடையே பதர் கானை கைது செய்ததற்கான காரணம் பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்வில்லை என்றும், அவர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டது தங்களுக்கு தெரியாது என்றும் பல்கலை. செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

வெள்ளைமாளிகை துணைத் தலைவர் ஸ்டீபன் மில்லர் பகிர்ந்துள்ள அறிக்கையில், இந்திய மாணவர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மாணவரின் நடவடிக்கை அவரை நாடுகடத்தவும் வகை செய்வதாக தீர்மானித்துள்ளார். மாணவர் யூத வெறுப்பை பரப்பியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்காவில் மாணவர் விசாவில் வசித்து வரும் பதர் கான் சூரி, அமெரிக்க பிரஜையான மாப்ஹேஸ் சலேவை திருமணம் செய்துள்ளார். அவர் ஜார்ஜ்டவுன் பல்கலையின், வெளிநாட்டுச் சேவைப் பள்ளியின் ஒரு பகுதியாக இருக்கும் அல்வலீத் பின் தலால் முஸ்லிம் – கிறிஸ்தவர்கள் புரிந்துணர்வு மையத்தில் முதுநிலை ஆராய்ச்சி மாணவராக உள்ளார்.

ஏற்கனவே இந்திய பல்கலைக்கழகத்தில், அமைதி மற்றும் மோதல் என்ற தலைப்பில் தனது முனைவர் ஆய்வு படிப்பினை முடித்துள்ளார். இந்த செமஸ்டரில், தெற்காசியாவில் பெரும்பான்மைவாதம் மற்றும் சிறுபான்மைகள் உரிமை என்ற தலைப்பில் வகுப்பு எடுத்து வருகிறார்.

யூத எதிர்ப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான மற்றொரு இந்திய மாணவி ரஞ்சனி ஸ்ரீனிவாசன், சுயமாக நாடுகடத்திக் கொண்ட ஒரு வாரத்துக்கு பின்பு இன்னொரு மாணவரின் கைது சம்பவம் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.

கடந்த ஆண்டு அமெரிக்க பல்கலைக்கழங்களில் இஸ்ரேல் எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.