சர்வதேச மகிழ்ச்சி தினம் முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது. இதற்கென உலகின் 147 நாடுகளில் மக்கள் வாழ்க்கைத்தரம் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. சமூக ஆதரவு, சுகாதாரம், சுதந்திரம், பெருந்தன்மை, ஊழல் குறித்த மக்கள் எண்ணம், மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டன. இது பற்றி மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
இதில், அதிகபட்ச புள்ளிகள் 10 என்றால், முதலிடம் பெற்ற நாடான பின்லாந்து 7.74 புள்ளிகளுடன் உலகின் மகிழ்ச்சியான நாடு என்ற தகுதியை பெற்றது. டென்மார்க், ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. மற்றவர்களை நம்புவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கை, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் இருந்து உதவிகளை பெறுவது போன்றவை மக்களின் சந்தோஷத்திற்கான காரணங்களாக கூறப்பட்டுள்ளன. பின்லாந்து தொடர்ந்து எட்டாம் ஆண்டாக இந்த தகுதியை பின்லாந்து பெற்றுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில், இலங்கை 133-வது இடத்திலும், வங்கதேசம் 134வது இடத்திலும், நேபாளம் 92வது இடத்திலும், சீனா 68வது இடத்திலும் உள்ளன. 2012ம் ஆண்டில் 11 வது இடத்தில் இருந்த அமெரிக்கா, 24 வது இடத்திற்கு சென்றுள்ளது. இங்கிலாந்து 23வது இடத்தைப் பிடித்துள்ளது. மொத்தம் உள்ள 147 நாடுகளில் இந்தியா 118-வது இடத்தில் உள்ளது.