சென்னை: எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் ரூ.50 லட்சத்தில் இந்திய தொல்லியல் துறை தலைமை இயக்குநர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் கடந்த 1876 மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் சர் ஜான் ஹூபர்ட் மார்ஷல். கடந்த 1902-ம் ஆண்டு தனது 26 வயதில் இந்திய தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக பொறுப்பேற்றார்.
1924-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் தேதி வரலாற்று சிறப்புமிக்க சிந்துவெளி பண்பாட்டின் கண்டுபிடிப்பை உலகுக்கு அறிவித்தார். இந்த அறிவிப்பு, இந்திய துணைக் கண்ட வரலாறு பற்றி அதுவரை நிலவிய புரிதல்களை புரட்டிப் போட்டது. அவர் கடந்த 1958 ஆக.17-ம் தேதி மறைந்தார்.
இந்நிலையில், கடந்த ஜன.5-ம் தேதி நடைபெற்ற சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கு தொடக்க விழாவின்போது, சர் ஜான் ஹூபர்ட் மார்ஷலுக்கு சிலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இதைத் தொடர்ந்து, சென்னை எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலையை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.