புதுடெல்லி: நியாயமான முறையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வாசகங்களைக் கொண்ட டி ஷர்ட்டை அணிந்து கொண்டு திமுக எம்பிக்கள் அவைக்கு வந்ததை அடுத்து, மக்களவை மற்றும் மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (மார்ச் 20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக #FairDelimitation என்ற வாசகம் பொறிக்கப்பட்ட டி ஷர்ட்டை அணிந்து வந்தனர். மேலும் அதில், தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என்பதைக் குறிக்கும் ‘Tamil Nadu will fight, Tamil Nadu will win’ எனும் வாசகங்களும் பொறிக்கப்பட்டிருந்தன.
இந்த ஆர்ப்பாட்டத்தை அடுத்து, அதே டி ஷர்ட்டுடன் அவர்கள் அவைக்குச் சென்றனர். மக்களவை எம்.பி.,க்களின் இந்த டி ஷர்ட் வாசகங்களைப் பார்த்த சபாநாயகர் ஓம் பிர்லா, வாசகங்கள் எழுதப்பட்ட டி-சர்ட்களை அணிந்து வருவது நாடாளுமன்ற விதிகளுக்கு எதிரானது என்று கூறினார்.
மேலும் அவர், “விதிகள் மற்றும் நடைமுறைகளுடன் சபை செயல்படுகிறது. உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தையும் மரியாதையையும் பராமரிக்க வேண்டும். சில எம்.பி.க்கள் விதிகளைப் பின்பற்றாமல் கண்ணியத்தை மீறுகிறார்கள், இது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று கூறிய ஓம் பிர்லா, அவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார்.
அப்போது திமுக எம்பிக்கள், தொகுதிமறுவரையறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னும் நடத்தப்படாததால் தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க வேண்டியது அவசரமானது அல்ல என்று கூறி கோரிக்கையை நிராகரித்தார்.
இதேபோல், மாநிலங்களவையிலும் டி ஷர்ட் விவகாரம் சர்ச்சையை கிளப்பியது. இதன் காரணமாக, நாடாளுமன்றக் குழு தலைவர்கள் தன்னை தனது அலுவலகத்தில் சந்திக்க அழைப்பு விடுத்த மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், அவையை நண்பகல் வரை ஒத்திவைப்பதாக அறிவித்தார். மீண்டும் 12.15 மணிக்கு அவைக்கு வந்த துணைத் தலைவர் ஹரிவன்ஷ், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தார்.
இதனிடையே, திமுக எம்பிக்களின் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா, “தொகுதி மறவரையறை விவகாரமாக இருந்தாலும் சரி, இந்தி திணிப்பு பிரச்சினையாக இருந்தாலும் சரி, திமுக நடத்தி வரும் நாடகத்தை 2026 தமிழகத் தேர்தலின் பார்வையில் இருந்து பார்க்க வேண்டும். திமுக ஆட்சியின் கீழ் வளர்ச்சியின்மை மற்றும் பரவலான ஊழல் போன்ற உண்மையான பிரச்சினைகளிலிருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப இது செய்யப்படுகிறது.
தொகுதி மறுவரையறையால் எந்த தென் மாநிலமும் மோசமாக பாதிக்கப்படாது என்று இந்திய அரசும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் நாட்டு மக்களுக்கு, குறிப்பாக அனைத்து தென் மாநிலங்களுக்கும் பலமுறை உறுதியளித்துள்ளனர். இந்த உறுதிமொழிகள் பலமுறை வழங்கப்பட்ட போதிலும், 2026 தேர்தல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு ஒரு பய உணர்வை உருவாக்க திமுக முயற்சிக்கிறது. மக்கள், அவர்களின் இந்த திட்டத்தை நிராகரிப்பார்கள்.” என குறிப்பிட்டார்.