கோவை – உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழாவை வழக்கம்போல நடத்த ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கோவையில் கடந்த 1998-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படாமல் தடைபட்ட உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூச மற்றும் சித்திரை தேர் திருவிழாக்களை இனி ஆண்டுதோறும் தடையின்றி நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்து கோயில்கள் பாதுகாப்பு இயக்க கோவை மாவட்ட பொதுச் செயலாளரான முத்துகணேசன் தாக்கல் செய்திருந்த மனுவில், “கோவை உக்கடத்தில் உள்ள கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற சிவன் கோயில். கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்வதற்கு முன்பாக சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கோயிலில் தைப்பூசம் மற்றும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு தேரோட்ட நிகழ்வுகள் விமரிசையாக நடத்தப்பட்டு வந்துள்ளது.

ஆனால் கடந்த 1998-ம் ஆண்டுக்குப்பிறகு தைப்பூச மற்றும் சித்திரைத் தேரோட்ட நிகழ்வுகள் நடைபெறாமல் தடைபட்டது. கடந்தாண்டு தேரோட்ட நிகழ்வுகளை நடத்த முற்பட்டபோது நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இந்த கோயிலில் கடந்த 28 ஆண்டுகளாக தடைபட்டுள்ள தைப்பூசம் மற்றும் சித்திரைத் தேர் திருவிழாவை வழக்கம்போல நடத்த அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர். ஸ்ரீராம் மற்றும் முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி. ஜெகந்நாத், “10-ம் நூற்றாண்டில் பராந்தக சோழர்களாலும், கொங்கு சோழர்களாலும் திருப்பணி மேற்கொள்ளப்பட்ட இந்த சிவ ஆலயத்தில் தைப்பூச மற்றும் சித்திரைத் தேர்திருவிழா நிகழ்வுகளை தடையின்றி நடத்த வேண்டும் என இந்த மனுவை தாக்கல் செய்தபிறகு, இந்தாண்டு கடந்த பிப்ரவரி மாதம் தைப்பூச தேர்திருவிழா வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. அதுபோல சித்திரைத் தேர்திருவிழா நிகழ்வுகளையும் நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்,” என்றார்.

அப்போது அறநிலையத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு ப்ளீடர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், “கரோனா பேரிடர், கோயில் திருப்பணி, குடமுழுக்கு போன்ற காரணங்களால் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 2024 வரை தேரோட்டம் நடைபெறவில்லை. கடந்த பிப்.11-ம் தேதியன்று தைப்பூச தேர் திருவிழா நடத்தப்பட்டதைப் போல வரும் மே 10ம் தேதி அன்று சித்திரை தேர் திருவிழாவும் அமைதியான முறையில் நடத்தப்படும்,” என்றார். காவல்துறை தரப்பில், “கோவை உக்கடம் பகுதி பதற்றம் நிறைந்த பகுதி. இருப்பினும், சித்திரைத் தேரோட்டம் நடத்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு அனுமதி வழங்கப்படும்,” என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் தைப்பூசம் மற்றும் சித்திரைத் தேர் திருவிழாக்களை இனி ஆண்டுதோறும் எந்த இடையூறும் இல்லாமல் தடையின்றி நடத்த வேண்டும் என அறநிலையத்துறைக்கும், போலீஸாருக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.