புளோரிடா: சர்வதேச விண்வெளி மையத்தில் 286 நாட்கள் தங்கிய பிறகு விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் மேலும் 2 விண்வெளி வீரர்களுடன் இணைந்து டிராகன்-9 விண்கலம் மூலம் நேற்று அதிகாலை பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.
நாசா விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் (59), புட்ச் வில்மோர் (62) ஆகியோர் கடந்தாண்டு ஜூன் 5-ம் தேதி போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்றனர். பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சென்ற இவர்கள் 8 நாட்களுக்குப் பின், அதே விண்கலத்தில் பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. விண்வெளி மையத்துக்கு செல்லும்போது ஸ்டார்லைனர் விண்கலத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.
ஆனால், பூமிக்கு திரும்புவதற்கு முன்பு, ஸ்டார்லைனர் விண்கலத்தை பரிசோதித்தபோது, அதன் புரொபல்லிங் சிஸ்டத்தில் பழுது இருந்தது கண்டறியப்பட்டது. இதை சரிசெய்யும் முயற்சிகள் பல மாதங்களாக நடைபெற்றது. ஆனால் பலன் அளிக்கவில்லை. அதில் பயணம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. இதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது தள்ளி வைக்கப்பட்டது.
ஸ்டார்லைனர் விண்கலம் ஆட்கள் இல்லாமல் பூமிக்கு திரும்பியது. மாற்று விண்கலத்தை அனுப்புவதில் பல தாமதங்கள் ஏற்பட்டன. மாற்று விண்கலத்தை அனுப்ப போயிங் நிறுவனமும் தயார் நிலையில் இல்லை.
கடந்தாண்டு செப்டம்பரில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் – 9 விண்கலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை அழைத்து வருவதற்காக, இதில் 4 வீரர்களுக்கு பதில் 2 வீரர்கள் மட்டுமே அனுப்பப்பட்டனர்.
டிராகன் – 10 விண்கலத்தில் மாற்று குழுவினர் வந்தவுடன், டிராகன் – 9 விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் திரும்பி வர முடிவு செய்யப்பட்டது. டிராகன் – 10 குழுவினர் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ‘ஃபல்கான் 9’ ராக்கெட்டில் சர்வதேச விண்வெளி மையத்துக்கு செல்வதும் தாமதம் ஆனது. இந்த குழுவினரை விரைவில் அனுப்பி, சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் விரைவில் பூமி திரும்ப ஏற்பாடு செய்யும்படி ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க்கிடம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார்.
அதன்படி டிராகன் – 10 விண்கலத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆனி மெக்லைன், நிகோல் அயர்ஸ், ஜப்பான் வீரர் டகுயா ஒனிஷி, ரஷ்ய வீரர் கிரிஸ் பெஸ் கோஸ் ஆகியோர் கடந்த 16-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தனர். இவர்களிடம் 2 நாட்களில் பணியை ஒப்படைத்து விட்டு சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர், நிக் ஷேக், ரஷ்ய வீரர் அலெக்சாண்டர் ஆகிய 4 வீரர்களும் டிராகன்-9 விண்கலத்தில் நேற்று முன்தினம் பூமிக்கு புறப்பட்டனர். சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து டிராகன்-9 விண்கலம் பிரிந்து பூமியை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
விண்வெளியில் 17 மணி நேர பயணத்துக்குப்பின் டிராகன் – 9 விண்கலம் பூமிக்குள் நுழைந்தது. அப்போது அதன் வேகம் மணிக்கு 28,800 கி.மீ. இந்த வேகத்தில், விண்வெளியின் வெற்றிடத்தில் இருந்து பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழையும்போது ஏற்படும் உராய்வால், விண்கலத்தின் வெளிப்புறத்தில், வெப்பநிலை 1,600 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இந்த வெப்பத்தை தாங்கும் விதத்தில் விண்கலம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
டிராகன் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா கடலை நெருங்கியதும், முதலில் 2 பாராசூட்கள் விரிந்தன. அதன்பின் 4 பாராசூட்கள் விரிந்து விண்கலத்தின் வேகத்தை கட்டுப்படுத்தின. டிராகன்-9 விண்கலம் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 3.27 மணிக்கு கடலில் விழுந்ததும், விண்கல மீட்பு குழு, படகில் சென்று விண்கலத்தை வெற்றிகரமாக மீட்டது. விண்கலத்தின் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளே இருந்த வீரர்களை மீட்பு குழுவினர் வெளியே கொண்டு வந்தனர்.
முதல் வீரராக நிக் ஹாக் வெளியே வந்தார். அதன்பின் அலெக்சாண்டர் வெளியேறினார். 3-வது நபராக சுனிதா வில்லியம்ஸ் வெளியேறி தனது கைகளை அசைத்தார். கடைசி நபராக புட்ச் வில்மோர் வெளிவந்தார்.
அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். விண்வெளியில் புவியீர்ப்பு விசையின்றி 286 நாட்கள் இருந்ததால், அவர்களுக்கு தசை மற்றும் எலும்பில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். இவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வழக்கமான உணவு சாப்பிட சிலநாள் ஆகும் என தெரிகிறது.
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பும் தருணத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருந்தது. விண்கலம் புளோரிடா கடலில் வெற்றிகரமாக இறங்கியதும், மக்கள் நிம்மதி அடைந்தனர். படகு மூலம் விண்கலம் மீட்கப்பட்டு அதிலிருந்து சுனிதா வில்லியம்ஸ் சிரித்த முகத்துடன் கையசைத்தபடி வெளியே வந்தார். இந்த காட்சிகளை கோடிக்கணக்கானோர் நேரலையில் பார்த்தனர்.
‘உங்களை பூமி மிஸ் செய்தது’ – பிரதமர் மோடி வாழ்த்து: பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘மீண்டும் வருக, க்ரூ 9. பூமி உங்களை மிஸ் செய்தது. இந்த பயணம் உங்களுடைய மன உறுதி, தைரியம் மற்றும் எல்லையற்ற மனித மனப்பான்மைக்கு சோதனையாக இருந்தது. சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட விண்வெளி வீரர்கள், விடாமுயற்சி என்றால் என்ன என்பதை நமக்கு மீண்டும் ஒருமுறை காட்டியுள்ளனர். அவர்களின் அசைக்க முடியாத உறுதிப்பாடு என்றென்றும் கோடிக்கணக்கானவர்களுக்கு ஊக்கமளிக்கும். வீரர்களின் பாதுகாப்பான வருகையை உறுதிசெய்ய அயராது உழைத்த அனைவரையும் நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்’ என கூறியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி: ‘விண்வெளியில் மாதக்கணக்கில் இருந்து ஒவ்வொரு சவாலையும் அசைக்க முடியாத உறுதியுடன் எதிர்கொண்டு வென்ற சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீண்டும் பூமிக்கு வரவேற்கிறேன்.
முதல்வர் ஸ்டாலின்: 4 வீரர்களும் பத்திரமாக பூமிக்கு வந்தடைந்த செய்தி, நம் அனைவரையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இத்தருணத்தில் சுனிதா வில்லியம்ஸுக்கும், அவரை பத்திரமாக அழைத்து வர முயற்சிகளை மேற்கொண்டவர்களுக்கும் பாராட்டுகள்.
இதேபோன்று, பேரவை எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.