சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு

பஸ்தர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றம் கான்கெர் மாவட்டங்களில் இன்று நடந்த என்கவுன்டர்களில் கொல்லப்பட்ட நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் இதனை உறுதிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பஸ்தர் மாவட்டத்தில் நக்ஸலைட்டுகளுக்கு எதிராக விரிவான நடவடிக்கை இன்று எடுக்கப்பட்டது. பிஜாப்பூர் – தண்டேவாடா எல்லைப் பகுதியில் இருந்து 26 நக்ஸலைட்டுகளின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், அதிக எண்ணிக்கையில் ஏகே-47 ரக துப்பாக்கிகள், தானாக இயங்கும் ஆயுதங்கள், பகுதி அளவில் தானாக இயங்கும் ஆயுதங்கள் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த மோதலில், மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் கொல்லப்பட்டார்.

இதேபோல், கான்கெர்-நாராயண்பூர் எல்லையில் நடந்த என்கவுன்டரில் 4 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்” என தெரிவித்தார். இதன்மூலம், இவ்விரு என்கவுன்டர்களிலும் சேர்த்து உயிரிழந்த நக்ஸலைட்டுகளின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.

முன்னதாக, பிஜாப்பூர் – தண்டேவாடா எல்லைப் பகுதியில் நடந்த என்கவுன்டரில் 18 நக்ஸலைட்டுகள், கான்கெர் – நாராயண்பூர் எல்லைப் பகுதியில் 4 நக்ஸலைட்டுகள் என 22 பேர் கொல்லப்பட்டதாக மாநில துணை முதல்வர் விஜய் ஷர்மா கூறி இருந்தார்.

அமித் ஷா பாராட்டு: சத்தீஸ்கரில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் வெற்றி பெற்றுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இன்று நமது வீரர்கள் ‘நக்சலைட்டுகள் இல்லாத இந்தியா’ என்ற திசையில் மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றுள்ளனர்.

மோடி அரசாங்கம் நக்சலைட்டுகளுக்கு எதிராக இரக்கமற்ற அணுகுமுறையுடன் முன்னேறி வருகிறது. சரணடைதல் முதல் வாழ்வாதாரம் வரை அனைத்து வாய்ப்புகளும் இருந்தபோதிலும் சரணடையாத நக்சலைட்டுகளுக்கு எதிராக பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை அரசு பின்பற்றுகிறது. அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குள் நாடு நக்சலைட்டுகள் இல்லாத நாடாக மாறப்போகிறது.” என்று தெரிவித்துள்ளார்.

விஷ்ணு தியோ சாய் பேட்டி: இந்த சம்பவம் தொடர்பாக ராய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய சத்தீஸ்கர் முதல்வர் விஷ்ணு தியோ சாய், “நமது பாதுகாப்புப் படைகளின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம். மார்ச் 31, 2026க்குள் நக்சலிசத்தை முடிவுக்குக் கொண்டுவருவது மத்திய உள்துறை அமைச்சரின் உறுதிப்பாடாகும். அவரது தீர்மானம் நிறைவேறும் என்று நாங்கள் நம்புகிறோம். இது இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் நன்மை.” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.