பிஜாப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாப்பூர் மற்றும் கான்கெர் மாவட்டங்களில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்த இருவேறு மோதல்களில் 22 நக்ஸல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
நக்ஸலைட்டுகளின் பிடியில் இருந்து சத்தீஸ்கரை முற்றிலுமாக விடுவிக்கும் நோக்கில் மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பிஜாப்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள ஒரு காட்டில் இன்று காலை 7 மணியளவில் கங்கலூர் காவல் நிலையப் பகுதியில் நக்ஸலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு ஈடுபட்டது. அப்போது, அவர்கள் மீது நக்ஸலைட்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்து, பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுத்தனர்.
இந்த மோதலில், பாதுகாப்புப் படையினர் 18 நக்சலைட்டுகளைக் கொன்றதாகவும், மேலும் உடல்களுடன் துப்பாக்கிகள், வெடிமருந்துகள் ஆகியவை மீட்கப்பட்டதாகவும் மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த துப்பாக்கிச் சண்டையில் மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை (டிஆர்ஜி) பிரிவைச் சேர்ந்த ஒரு காவலர் கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் தேடும் பணி நடந்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, சத்தீஸ்கரின் கான்கெர் – நாராயண்பூர் மாவட்ட எல்லைப் பகுதியில் நடைபெற்ற மற்றொரு மோதலில் 4 நக்ஸலைட்டுகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். கொரோஸ்கோடோ என்ற கிராமத்துக்கு அருகில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பஸ்தர் ஐஜி பி. சுந்தரராஜ் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்மூலம், பாதுகாப்புப் படையினருக்கும் நக்ஸலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் இன்று 22 நக்ஸலைட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஜனவரி 17ம் தேதி பிஜாப்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே நடந்த மோதலில் பன்னிரண்டு நக்சலைட்டுகள் கொல்லப்பட்ட நிலையில், மீண்டும் அதே மாவட்டத்தில் இன்று 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.