கடந்த 9 மாதங்களாக விண்வெளியில் சிக்கி தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் நேற்று அதிகாலை பத்திரமாக பூமி திரும்பினர். அவர்களை பூமியே வரவேற்றது போல் உலகெங்கிலும் அவ்வளவு மகிழ்ச்சி. விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு திரும்ப அந்த 17 மணி நேர பயணம் முழுவதும் விஞ்ஞானிகள் பரபரப்பாகவே இருந்தனர். பூமிக்கு திரும்பிய அந்த தருணத்தில் சுனிதாவின் முகத்தில் சிரிப்பை பார்த்து அனைவரும் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை…
விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு சிகிச்சை, பயிற்சி: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்கள் பத்திரமாக பூமிக்கு திரும்பி உள்ளனர். எனினும், விண்கலத்திலிருந்து வெளியேறிய அவர்களால் நிற்கவோ எழுந்து நடக்கவோ முடியாத நிலையில் இருந்ததை பார்க்க முடிந்தது. முகம் வீங்கிய நிலையிலும் பார்வை மங்கியும் காணப்பட்டனர்.
இதனால் அவர்கள் ஸ்ட்ரெச்சர்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தீவிர உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும். பின்னர் உரிய சிகிச்சையும் பயிற்சியும் வழங்கப்படும். இந்நிலையில் நாசா விண்வெளி பயணத்துக்கான மருத்துவர் ஜோ டெர்வே கூறியதாவது: பூமிக்கு திரும்பும் முன்பு விண்வெளி வீரர்களின் உடல்நிலை நல்ல நிலையில் இருந்தது.
விண்வெளி பயணத்தின்போது மனிதர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து ஆராய்ச்சி நடைபெறுகிறது. பல தசாப்தங்களாக சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, குறுகிய கால பயணமாக விண்வெளிக்கு சென்று திரும்பினால்கூட வீரர்களின் உடல்நிலையில் சில மாற்றங்கள் ஏற்படுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பூமிக்கு திரும்பிய பிறகு பெரும்பாலான மாற்றங்கள் ஏற்படும். எனவே, அவர்களுக்கு மருத்துவ சிகிச்சையும் பயிற்சியும் வழங்கப்படும். அவர்கள் எவ்வளவு விரைவாக இயல்புநிலைக்கு திரும்புவார்கள் என்பது நபருக்கு நபர் மாறுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கட்டி இழுத்துச் செல்லும் மீட்பு குழுவினர்.
என்ன மாற்றங்கள் ஏற்படும்: சர்வதேச விண்வெளி நிலையத்தில் புவி ஈர்ப்பு விசை இல்லாத காரணத்தால் வீரர்களின் உடல்நிலையில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. குறிப்பாக அவர்களின் எலும்பு அடர்த்தி குறைகிறது, தசைகள் பாதிப்படைகின்றன. இதுதவிர, நோய் எதிர்ப்பு அமைப்பு, இதய செயல்பாடுகள், கண் பார்வை மற்றும் டிஎன்ஏ கட்டமைப்பு பாதிக்கப்படுகிறது. இதில் பெரும்பாலான பாதிப்புகள் தற்காலிகமானவை.
வீரர்களை விண்வெளிக்கு அனுப்புவதற்கு முன்பு அந்த சூழ்நிலையை உடல் ஏற்றுக்கொள்ளும் வகையில், பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். இதுபோல, வீரர்கள் பூமிக்கு திரும்பியதும் எலும்பு மற்றும் தசை வலிமையை மீட்டெடுக்க மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்படும். இதன்மூலம் அவர்கள் படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்புவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நாசா மருத்துவமனையில் சுனிதா: விண்வெளியில் இருந்து பூமி திரும்பும் வீரர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும். அவர்களுக்கு கை, கால்களை அசைப்பதில் சிரமம் ஏற்படும். தலை சுற்றல், தசை சிதைவு, எலும்பு சிதைவு போன்ற பல்வேறு பாதிப்புக்கள் அவர்களுக்கு ஏற்படும். இதனால் பூமி திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 4 வீரர்களும் அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் உள்ள நாசா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் ஓரிரு நாட்களில் அவர்களை குடும்பத்தினர் சந்திப்பர். சுமார் 45 நாட்கள் வரை அவர்களின் உடல் நிலை அந்த மருத்துவமனையிலேயே கண்காணிக்கப்படும்.
வீரர்களை பாதுகாத்தது எது? – விண்வெளியிலிருந்து, பூமிக்குள் விண்கலம் நுழையும்போது ஏற்படும் உராய்வின் காரணமாக 1,600 டிகிரி வெப்பம் ஏற்படும். இதில் தீப்பிழம்பு போல் விண்கலம் காட்சியளிக்கும். அப்போது இந்த வெப்பம் விண்கலத்துக்குள் பரவாமல் தடுக்க ‘பீனோலிக்-இம்பிரக்னேட்டட் கார்பன் அப்லாடர் (பிஐசிஏ) எனப்படும் எடை குறைவான டைல்ஸ் ஒட்டப்படுகிறது. இந்த வெப்ப பாதுகாப்பு ஓடுகள்தான், விண்கலத்துக்குள் இருக்கும் வீரர்களை பாதுகாக்கிறது.
குடும்பத்தினர் மகிழ்ச்சி: சுனிதா பூமிக்குத் திரும்பியது குறித்து அவரது உறவினர் தினேஷ் ராவல் அளித்தப் பேட்டியில், “நேற்றுவரை எங்களுக்கு பதற்றமாக இருந்தது. சுனிதாவை மீட்பு படகில் பார்த்ததும் நாங்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தோம். எங்கள் பிரார்த்தனைகளை இறைவன் நிறைவேற்றியுள்ளார்’’ என்றார்.