டீப் ஃபேக் இணையக் குற்றங்களை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? – கனிமொழி கேள்விக்கு அரசு பதில்

புதுடெல்லி: டீப் ஃபேக் இணையவழிக் குற்றங்களை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து திமுக எம்.பி கனிமொழி எழுப்பிய கேள்விக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா நீண்ட பதில் அளித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை திமுக குழு தலைவர் கனிமொழியின் கேள்விகளுக்கான மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதின் பிரசாதா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: தொழில்நுட்ப பயன்பாட்டை ஜனநாயகப்படுத்துவதற்கான பிரதமரின் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, ‘அனைவருக்கும் ஏ.ஐ (செயற்கை நுண்ணறிவு)’ என்ற கருத்தில் மத்திய அரசும் வலிமையாக இருக்கிறது. இந்த முயற்சி, சமூகத்தின் அனைத்துத் துறைகளுக்கும் ஏ.ஐ பயனளிப்பதை உறுதி செய்வதையும், புதுமை மற்றும் வளர்ச்சியை இயக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் நமது மக்களின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவின் சக்தியைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது. அதே நேரத்தில், ஏ.ஐ.-யால் ஏற்படும் அபாயங்கள் மற்றும் ஏ ஐ பாதுகாப்பானது மற்றும் நம்பகமானது என்பதை உறுதி செய்வதற்கான கட்டுப்பாடுகளை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை அரசாங்கம் அறிந்திருக்கிறது.

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களின் விரிவான பொது ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு பிப்ரவரி 25, 2021-ல் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021 -ஐ அறிவித்துள்ளது.

இதில் , கடந்த அக்டோபர் 28, 2022 மற்றும் ஏப்ரல் 6, 2023 அன்று திருத்தங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. தற்போதுள்ள சட்டத்தில் தேவையான மாற்றங்கள் மற்றும் புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளிட்ட முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது.

டீப் ஃபேக்குகளை உருவாக்குதல், விநியோகித்தல் மற்றும் பரப்புதல் ஆகியவற்றால் ஏற்படும் சைபர்-பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் தனிநபர் மட்டத்திலோ அல்லது தேசிய அளவிலோ ஆபத்தை ஏற்படுத்தக்கூடியன. டீப் ஃபேக்குகளை உருவாக்க உதவும் தொழில்நுட்பங்கள் தற்போது தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகள் 2021 போன்ற விதிகளின் கீழ் சட்ட ரீதியாக எதிர்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஏ ஐ ஆல் இயக்கப்படும் தவறான தகவல்கள் மற்றும் டீப் ஃபேக்குகளின் பரவலான புழக்கத்தால் ஏற்படும் தீங்குகள் மற்றும் குற்றங்களை நிவர்த்தி செய்வதற்கான அவசம் உணரப்பட்டுள்ளது. எனவே, டீப்ஃபேக்குகளை எதிர்ப்பதில் அடையாளம் காணப்பட்ட சவால்களைப் பற்றி விவாதிக்க மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் ஏற்கெனவே இத்துறை தொடர்பான நிபுணர்கள், சமூக ஊடக நிபுணர்கள் ஆகியோருடன் பல ஆலோசனைகளை நடத்தியது.

இதன் அடிப்படையில் மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் கடந்த 2023, டிச., 2024,மார்ச் 15 மற்றும் 2024,செப். 03 ஆகிய தேதிகளில் இது தொடர்பான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், ஐடி. விதிகள் 2021-க்கு உட்பட்ட விதி 3(1)(பி) இன் கீழ் கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளன.

பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர் தலைமையில், இந்திய கல்வித்துறை, தொழில்துறை மற்றும் அரசாங்கத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினருடன், இந்தியாவுக்கான குறிப்பிட்ட ஒழுங்குமுறை AI கட்டமைப்பிற்கான ஆலோசனைக் குழுவை அரசாங்கம் அமைத்துள்ளது.

ஏஐ-யின் பாதுகாப்பான மற்றும் நம்பகமான மேம்பாடு மற்றும் பயன்பாட்டிற்கான பொறுப்பான ஏஐ கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பான அனைத்து சிக்கல்களையும் நிவர்த்தி செய்யும் நோக்கத்துடன் இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

டீப்ஃபேக் வீடியோக்கள் மற்றும் படங்களைக் கண்டறிவதற்கான மென்பொருளை வடிவமைத்தல் மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி அளிக்கிறது. இணையத்தைப் பயன்படுத்தாமல் டீப்ஃபேக்குகளைக் கண்டறிய ஃபேக் செக் (FakeCheck) என்ற பெயரில் டீப் ஃபேக்குகளைக் கண்டறியும் திறன் கொண்ட ஒரு முன்மாதிரி கருவி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருவி, சோதனை செய்வதற்கும் மேலும் சுத்திகரிப்புக்கான கருத்துகளைப் பெறுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட விசாரணை நிறுவனங்களுடன் பகிரப்பட்டுள்ளது. இந்திய ஏஐ மிஷனின் கீழ் ஏஐ தொழில்நுட்பங்களின் பொறுப்பான மேம்பாடு, பயன்படுத்தல் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வலுவான தேவையை நிவர்த்தி செய்யப்படுகிறது.

வாட்டர் மார்க்கிங் மற்றும் லேபிளிங், நெறிமுறை ஏஐ கட்டமைப்புகள், ஏஐ இடர்மதிப்பீடு மேலாண்மை, டீப் ஃபேக் கண்டறிதல் கருவிகள் போன்றவை தொடர்பாக தகுதியான ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துவதற்கும் டிஜிட்டல் அபாயங்களைச் சமாளிப்பதற்கும் பயனர்கள் மற்றும் நிறுவனங்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்க சிஇஆர்டி பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளது: நவம்பர் 2023-ல் பல்வேறு அமைச்சகங்களுக்கும் டிஜிட்டல் தனிப்பட்ட தரவு அல்லது முக்கியமான தனிப்பட்ட தரவு அல்லது தகவல் உள்ளிட்ட தகவல்களைச் செயலாக்கும் நிறுவனங்களாலும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகளின் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தீங்கிழைக்கும் நிரல்களைக் கண்டறிய சைபர் ஸ்வச்ச்தா கேந்திராவை (Botnet Cleaning and Malware Analysis Centre) இயக்குகிறது, மேலும் அவற்றை அகற்ற இலவச கருவிகளை வழங்குகிறது. மேலும் குடிமக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சைபர் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் சிறந்த ஆலோசனைகளை வழங்குகிறது. நிதித்துறையில் நடக்கும் சைபர் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்கும், கட்டுப்படுத்துவதற்கும் சிஇஆர்டி ‘ஃபின்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.