தல்லேவால் கைது, விவசாயிகளை அப்புறப்படுத்திய போலீஸ்: பஞ்சாப் – ஹரியானா எல்லையில் பரபரப்பு

சண்டிகர்: விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச அதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போராடி வரும் விவசாயிகளை போலீஸார் அப்புறப்படுத்தினர்.

சம்யுக்தா கிஷான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜக்ஜித் சிங் தல்லேவால், சர்வாண் சிங் பாந்தே உள்ளிட்டோரை பஞ்சாப் போலீஸார் நேற்றிரவு (புதன்கிழமை) கைது செய்தனர். மேலும், எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை அப்புறப்படுத்தி அவர்களின் தற்காலிக கூடாரங்களையும் அகற்றினர். போராட்டக் களத்திலிருந்து வீடு திரும்ப விரும்பிய விவசாயிகளை பேருந்துகள் மூலம் அனுப்பிவைத்தனர். எதிர்ப்பில் ஈடுபட்டோரை கைது செய்தனர். இதனால் பஞ்சாப் – ஹரியானா எல்லையில் உள்ள கன்னவுரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து பஞ்சாப் – ஹரியானா எல்லையில் போக்குவரத்துக்கு எவ்வித சிரமும் இன்றி பாதையை சீரமைக்கும் பணியில் போலீஸார் இன்று (வியாழன்) காலை முதல் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி தொடங்கி: பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து பஞ்சாப் – ஹரியானா எல்லையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பலமுறை அவர்கள் டெல்லி நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்துவதும், கைது செய்வதும், விடுவிப்பதும் தொடர்ந்து வந்தது.

இதற்கிடையில் விவசாய சங்கத் தலைவரான ஜகஜித் சிங் தலேவால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இது போராட்டக் களத்தை மேலும் வலுவாக்கியது.

இந்தச் சூழலில் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மத்திய அரசு குழுவும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் சண்டிகரில் விவசாயிகளுடன் மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுஹான், பிரஹலாத் ஜோஷி, பியுஷ் யோயல் ஆகியோர் புதன் கிழமை பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடந்ததாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது 7-வது சுற்று பேச்சுவார்த்தை ஆகும். அடுத்த பேச்சுவார்த்தை மே மாதம் நடைபெறுகிறது. இதற்கிடையில் மத்திய அரசு குழுவை சந்தித்துவிட்டு ஆம்புலன்ஸில் திரும்பிய தலேவால் உள்ளிட்ட தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தத் தகவல் போராட்டக் களத்துக்குப் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே பஞ்சாப் – ஹரியானா – ஷம்பு எல்லைகளில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவ்சாயிகளையும் போலீஸார் கைது செய்தனர்.

ஓராண்டாக மூடப்பட்ட சாலை.. பஞ்சாப் – ஹரியானா -கன்னவுரி எல்லையில் தற்காலிக கூடாரம் அமைத்து போராட்டம் நடத்தப்பட்டு வந்ததால் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியிருந்தது. இந்நிலையில் பஞ்சாப் அரசு உத்தரவின் பேரில் போலீஸார் கூடாரங்களை அப்புறப்படுத்தி அப்பகுதியில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு செல்லாமல் இருக்க போட்டிருந்த கான்க்ரீட் தடுப்புகளையும் அகற்றினர். ஓராண்டாக மூடப்பட்ட சாலையை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மீண்டும் விவசாயிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

‘மத்திய அரசின் துரோகம்’ – ஒலிம்பிக் வீரர் பஜ்ரங் புனியா மத்திய அரசு துரோகம் செய்துவிட்டதாகவும், நாட்டு மக்கள் அனைவரும் விவசாயிகளுக்கு துணை நிற்க வேண்டும் என்று கோரியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய புனியா, “பேச்சுவார்த்தைக்கு அழைத்துவிட்டு வந்த இடத்தில் விவசாய சங்கத் தலைவர்களைக் கைது செய்துள்ளனர். போராட்டக் களத்தில் இருந்த விவசாயிகளையும் கைது செய்துள்ளனர். கூடாரங்களை அப்புறப்படுத்தியுள்ளனர். மத்திய அரசும், பஞ்சாப் அரசும் விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டது. இச்சூழலில் விவசாயிகளுக்கு நாட்டு மக்கள் துணை நிற்க வேண்டும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.