திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் தற்போது குப்பைகள் கொட்டும் இடமாக மாறி, கழிவுநீர் உள்ளே செல்லும் அவல நிலை உருவாகி உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குற்றச் சம்பவங்கள் நடக்கும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டது என்று அப்பகுதி மக்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர்.
15 ஆண்டுகளுக்கு முன்பு, திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டபோது, பழைய பேருந்து நிலையத்தின் பயன்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதனால், தற்போது பழைய பேருந்து நிலையம் தூய்மையற்ற நிலையில் காணப்படுகிறது. அப்போதைய நகராட்சி நிர்வாகம், பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அங்கு வணிக வளாகம் கட்டப்படும் என்று அறிவித்திருந்தாலும், அதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. இதனால், இந்த இடம் முற்றிலும் குப்பைகள் கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கால்வாய் உடைந்து உள்ளே செல்லும் நிலையும் உருவாகியுள்ளது.

பரபரப்பான அந்தச் சாலையில், ஒரே நிமிடத்தில் பல வாகனங்கள் கடந்து செல்கின்றன. சாலையோரம் வெளியேறும் கழிவுநீரிலிருந்து துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் முகம் சுளித்தபடியே அந்த இடத்தைக் கடந்து செல்கின்றனர். சிலர் துர்நாற்றம் தாங்க முடியாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்வதையும் பார்க்க முடிகிறது.
இது குறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தபோது, “இது பல வருடங்களாகவே இப்படித்தான் உள்ளது, இதை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.

இதனால் எங்களுக்குத்தான் துர்நாற்றமும், நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த இடத்தைச் சுத்தம் செய்து, இங்குக் குற்றச் செயல்களில் ஈடுபடுவார்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும்” என்றனர்.

இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் பொதுமக்களிடம் பேசியும் ஸ்பாட் விசிட் அடித்தும்… திருப்பத்தூர் : பழைய பேருந்து நிலையத்தின் அவல நிலை! – சீரமைப்பார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் கடந்த அக்டோபர் மாதம் செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் எதிரொலியாக அதிகாரிகள் அந்த இடம் முழுவதும் மண் கொட்டி பாதையைச் சமதளப்படுத்தி கால்வாய் நீர், குப்பைகளை அகற்றி லாரி, ஆட்டோ விடும் வசதியைச் செய்து கொடுத்துள்ளார்கள்.