கொல்லம்,
கேரள மாநிலம் கொல்லம், உளியக்கோவில் பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் கோமஸ். இவருக்கு ஒரு மகளும், பெபின் ஜார்ஜ் கோமஸ் (வயது22) என்ற மகனும் இருந்தனர். மகன் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது அக்காளும் கொல்லம் நீண்டகரையை சேர்ந்த குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜு மகன் தேஜஸ் ராஜ் (23) என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் முதலில் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர். ஆனால் இளம்பெண்ணை தேஜஸ் ராஜுக்கு திருமணம் செய்து கொடுக்க தம்பி பெபின் ஜார்ஜ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த இளம்பெண்ணுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதன் பிறகு காதலன் தேஜஸ் ராஜுடனான தொடர்பை அவர் துண்டித்ததாக கூறப்படுகிறது.
தேஜஸ் ராஜ் பல முறை அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் இளம்பெண் போனை எடுக்கவில்லை. இதனால் தேஜஸ் ராஜ் காதலியின் வீட்டுக்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு பெற்றோரிடம் கேட்டார். ஆனால் அவர்கள் மறுத்து விட்டனர். இது வாலிபருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.இதற்கிடையே தேஜஸ் ராஜ் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் ஒரு காரில் காதலியின் வீட்டுக்கு சென்று கதவை தட்டினார். அப்போது வீட்டிற்குள் இருந்து பெபின் ஜார்ஜ் கதவை திறந்து வெளியே வந்தார்.
உடனே அவரை தேஜஸ் ராஜ் கத்தியால் சரமாரியாக குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு தந்தை ஜார்ஜ் கோமஸ் ஓடி வந்து தடுக்க முயன்றார். அவரையும் தேஜஸ் ராஜ் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து காரில் தப்பிச் சென்றார். பின்னர் செம்மான்முக்கு பகுதி சென்று தற்கொலை செய்யும் நோக்கத்தில் கைநரம்பை அறுத்தார். அத்துடன் அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே கத்திக்குத்தில் படுகாயமடைந்த ஜார்ஜ் கோமஸ், பெபின் ஜார்ஜ் ஆகிய 2 பேரும் கொல்லத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி பெபின் ஜார்ஜ் பரிதாபமாக இறந்தார். ஜார்ஜ் கோமசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் காதலியை திருமணம் செய்ய அவரது தம்பி எதிர்ப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக தெரிகிறது. மேலும் காதலி தன்னை புறக்கணித்து வந்ததால் அவரை கொல்ல திட்டமிட்டு வந்திருக்கலாம் என்றும், அந்த சமயத்தில் அவர் இல்லாததால் தம்பியை தாக்கியிருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர்.