மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் நகரத்தில் நடந்த வன்முறையில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க 18 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நாக்பூர் நகரில் திங்கள்கிழமை ஏற்பட்ட வன்முறை தொடர்பாக இதுவரை 69 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சில பகுதிகளில் மூன்றாவது நாளாக இன்றும் ஊரடங்கு தொடர்ந்து நடைமுறையில் உள்ளது.
இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “இந்த வன்முறை தொடர்பாக போலீஸார் இதுவரை 200 பேரை அடையாளம் கண்டுள்ளனர், திங்கள் கிழமை, கணேஷ்பேத் மற்றும் கோட்வாலி காவல்நிலையங்களில் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 200 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கலவரத்தின் போது பதிவான சிசிடிவி காட்சிகளுடன் பிறரை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.” என்று தெரிவித்தார்.
முன்னதாக, நாக்பூர் காவல் ஆணையர் ரவிந்தர் குமார் சிங்கல் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறுகையில், “குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்புக்குழுவில், குற்றப்பிரிவு போலீஸாருடன் கணேஷ்பேத், கோட்வாலி மற்றும் தேசில் காவல் நிலையங்களைச் சேர்ந்த போலீஸாரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு சைபர் பிரிவு போலீஸாருடன் இணைந்து செயல்பாடுவர்கள்.” என்றார்.
இதனிடையே, கைது செய்யப்பட்டுள்ள 69 பேரில், சிறுபான்மை ஜனநாயக கட்சியைச் சேர்ந்த பகீம் கான் என்பவரும் ஒருவர். நாக்பூர் காவல் நிலையத்துக்கு முன்பு நடந்த போராட்டத்துக்கு கான் தலைமை தாங்கினார் என்று போலீஸார் தெரிவித்திருந்தனர். கான் தலைமையில் 50- 60 பேர் கணேஷ்பேத் காவல் நிலையத்துக்கு முன்பாக சட்டவிரோதமாகக் கூடி, விஷ்வ இந்து பரிஷித் போராட்டத்துக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர்.
தொடர்ந்து கானும் இன்னும் 8 பேரும் பஹல்தார்புரா பகுதிக்குச் சென்றனர். அங்குள்ள சிவாஜி மகாராஜா சவுக்கில் ஏற்கெனவே சிறுபான்மையினர் சமூகத்தைச் சேர்ந்த 500 பேர் கூடியிருந்தனர்.” என்று வழக்கு தொடர்பான முதல்தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்தான் கலவரத்துக்கு மூளையாக செயல்பட்டவரா என்ற கேள்விக்கு, “இந்த கலவரத்துக்கு காரணம் தனிநபரா அல்லது அமைப்பா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.” என்று போலீஸார் தெரிவித்தனர்.
முகலாய அரசர் அவுரங்கசீப் சமாதியை இடமாற்றம் செய்வது தொடர்பாக நாக்பூரில் இரு சமூகத்தினரிடையே திங்கள்கிழமை வன்முறை மூண்டது. இதில், 33 காவல் துறை அதிகாரிகள் உட்பட 38 பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த கலவரத்தில் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இருப்பினும். நூற்றுக்கணக்கான வீடுகள், கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டன.