புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சியும், ஆம் ஆத்மி கட்சியும் நாட்டுக்கு உணவு வழங்கும் விவசாயிகளுக்கு எதிராக கைகோத்திருக்கும் இரண்டு விவசாய விரோதக் கட்சிகள் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். பஞ்சாப் மாநில எல்லையான ஷம்பு மற்றும் கன்னாவுரி பகுதிகளில் ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த விவாசாயிகளின் தற்காலிக கூடாரங்களை பஞ்சாப் அரசு புதன்கிழமை இரவு புல்டோசர் மூலம் இடித்த நிலையில் கார்கே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டுக்கு உணவு வழங்கி வரும் விவசாயிகளுக்கு எதிராக இரண்டு விவசாயிகள் விரோதக் கட்சிகள் ஒன்றாக கைகோத்திருப்பதாக தெரிகிறது. முதலில் பஞ்சாப் அரசு விவசாயிகளைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. பின்பு அவர்களை போராட்டக்களத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது.
விவசாயிகளின் மூத்த தலைவர்களான ஜக்ஜித் சிங் தல்லேவால் மற்றும் சர்வாண் சிங் பாந்தேர் ஆகியோரை பஞ்சாப் போலீஸார் வலுக்கட்டாயமாக கைது செய்ததை எவ்வளவு கண்டித்தாலும் போதாது. அதிகார ஆணவ மயக்கத்தில் இருக்கும் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சி இரண்டுமே விவசாயிகளுக்கு எதிராக திரும்பியுள்ளன.
பாஜக ஆட்சியில் மத்தியப் பிரதேசத்தின் மந்த்சவுரில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டையும், லக்கிம்பூர் கேரியில் மோடி அரசின் அமைச்சர் ஒருவரின் மகன் விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கியதையும், கடந்த 2015-ம் ஆண்டு அரவிந்த் கேஜ்ரிவாலின் பேரணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதையும் நாடு இன்னும் மறந்து விடவில்லை.
பிரதமர் மோடி உத்தரவாதமளித்த குறைந்தபட்ச ஆதரவு விலையாக இருக்கட்டும், டெல்லியில் மூன்று கருப்புச் சட்டங்களை ஆம் ஆத்மி அரசு உடனடியாக அமல்படுத்தியதாகட்டும் இந்த இரண்டு கட்சிகளும் நாட்டின் விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டன. இந்த இரண்டு விவசாயிகள் விரோத கட்சிகளை நாட்டின் 62 கோடி விவசாயிகளும் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என்று கார்கே தெரிவித்துள்ளார்.
முன்னதாக பஞ்சாப் – ஹரியானா எல்லையில் ஓராண்டுக்கு மேலாக போராட்டம் நடத்தி வந்த மூத்த விசாய சங்கத் தலைவர்கள் ஜக்ஜித் தல்லேவால் மற்றும் சர்வாண் சிங் பாந்தேர் உள்ளிடோரை பஞ்சாப் போலீஸர் புதன்கிழமை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். போராட்டக்காரர்களின் தற்காலிக கூடாரங்களையும் அப்புறப்படுத்தினர்.
பஞ்சாப் அரசின் இந்த நடவடிக்கையை ஆதரித்து கருத்து தெரிவித்திருந்த அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, ‘நீண்ட காலமாக நெடுஞ்சாலைகள் மறிக்கப்பட்டிருப்பதால் மாநிலத்தின் தொழில், வணிகம் மற்றும் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்த போதிலும், முக்கியமான பொருளாதார வழித்தடமாக இருக்கும் நெடுஞ்சாலைகளைத் திறப்பது மிகவும் முக்கியம்’ என்று வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, மத்திய அமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டு, ‘பஞ்சாப் அரசின் நடவடிக்கை, மத்திய அரசு மற்றும் விவசாய சங்கத் தலைவர்களுடன் நடந்த வரும் பேச்சுவார்த்தையை மடைமாற்றும் அப்பட்டமான முயற்சி’ என்று குற்றம்சாட்டியுள்ளார்.