‘பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது குற்றம் அல்ல’ – விவாகரத்து வழக்கில் உயர் நீதிமன்றம் கருத்து

மதுரை: மனைவி ஆபாசப் படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது போன்றவை கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கரூரை சேர்ந்த நபர் தனது மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி கரூர் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை ரத்து செய்து விவாகரத்து வழங்கக் கோரி அந்த நபர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பூர்ணிமா அமர்வு விசாரித்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவின் விவரம்: மனுதாரருக்கும் அவர் மனைவிக்கும் 2018-ல் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. இருவருக்கும் இது இரண்டாவது திருமணம்.

இருவரும் முதல் திருமணத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். தற்போது 2-வது திருமணத்தில் இருந்தும் வெளியேறும் வகையில் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். 2020 டிசம்பர் மாதத்திலிருந்து கணவன், மனைவி பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில், தனது மனைவிக்கு பாலியல் நோய் உள்ளது. அவர் ஆபாச படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார். மாமனார், மாமியாரும் தன்னை மதிக்கவில்லை, அதிமாக செலவு செய்கிறார். அதிக நேரம் போனிலேயே செலவிடுகிறார். வீட்டு வேலைகளை செய்வதில்லை என்ற குற்றச்சாட்டுகளை கூறி விவாகரத்து கோரி மனுதாரர் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனைவி பாலியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதற்கு மருத்துவ அறிக்கை தாக்கல் செய்யவில்லை. உண்மையில் மனைவிக்கு பாலியல் நோய் இருந்திருந்தால் இருவரும் 2 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்துள்ளதால் மனுதாரருக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். அவ்வாறு எதுவும் இல்லை. மேலும் மனைவிக்கு பெண்கள் தொடர்பான நோய் இருப்பதாக மனுதாரர் கூறியுள்ளார். அந்த நோய் எளிதில் குணப்படுத்தக்கூடியதே.

மனைவி ஆபாசப் படங்களை பார்த்து சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என மனுதாரர் குற்றம்சாட்டியுள்ளார். தடை செய்யப்பட்ட வகையைத் தவிர்த்து தனிப்பட்ட முறையில் ஆபாச படங்களை பார்ப்பது குற்றமாகாது. ஆபாச படங்களுக்கு அடிமையாவது தவறு. மனைவி சுய இன்பத்தில் ஈடுபடுகிறார் என்பது மனுதாரரின் மற்றொரு குற்றச்சாட்டு. ஆண்கள் சுய இன்பம் செய்வதை உலகம் ஏற்றுக்கொள்ளும் சூழலில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதை குற்றமாக கருத முடியாது. ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவதால் இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும். அதே நேரத்தில் பெண்கள் சுய இன்பத்தில் ஈடுபடுவது இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும் என்பதற்கு தரவுகள் எதுவும் இல்லை. சுய இன்பம் தடை செய்யப்பட்ட ஒன்றல்ல.

இதனால் மனைவி ஆபாச படங்கள் பார்ப்பது, சுய இன்பத்தில் ஈடுபடுவது ஆகிய கணவரை கொடுமைப்படுத்துவது ஆகாது. தனியுரிமை அடிப்படை உரிமையாக உள்ளது. இது திருமண உறவுகளில் இருப்பவர்களுக்கு பொருந்தும். திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் மனைவியாக மாறுகிறார். அப்போது அவரது தனியுரிமையை கைகொள்கிறார். மனைவியின் தனியுரிமைக்கான வரையறையில் அவரது பாலியல் சுதந்திரத்தின் பல்வேறு அம்சங்களும் அடங்கியுள்ளது. ஒரு பெண் மனைவியாகிவிட்டார் என்பதற்காக அவரது அடிப்படை உரிமையை மறுக்க முடியாது.

மனைவி மீது மனுதாரர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவைகள் உண்மையாக இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகள் சட்டப்படி விவாகரத்து கோருவதற்கான காரணங்களாக இல்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.