தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பூத் அளவிலும் தண்ணீர், மோர் பந்தல்கள் அமைக்குமாறு பாஜகவினருக்கு கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இயற்கை சீற்றங்கள், பிரச்சினைகளின்போது மக்களுக்கு உறுதுணையாக களத்தில் நின்று, அவர்களது துயர் துடைத்து, மீட்பு, நிவாரண பணிகளில் முன்னின்று செயல்படுவது, தமிழக பாஜக சகோதர, சகோதரிகளின் இயல்பு. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தின்போது, அவர்கள் தாமாக முன்வந்து, தண்ணீர் பந்தல்கள், மோர் பந்தல்களும் அமைத்து, மக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர்.
இந்த ஆண்டும் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயிலின் கடுமை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. எனவே, பொதுமக்களின் தாகம் தீர்க்கும் உன்னத பணியில் தமிழக பாஜக சகோதர, சகோதரிகள் மீண்டும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது.
தமிழகத்தின் ஒவ்வொரு பூத் அளவிலும் குறிப்பாக, பேருந்து நிறுத்தங்கள், பள்ளிகள், சந்தைகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களின் அருகே தங்களால் இயன்ற அளவில், தண்ணீர் பந்தல், மோர் பந்தல் அமைக்க வேண்டும். கோடைகாலம் முழுவதும் அவற்றை பராமரித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து பயன்படுமாறு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.