கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை, தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில், அமெரிக்காவின் ஓசன் இன்பினிட்டி என்ற ரோபோட்டிக் நிறுவனம் தேட மலேசிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பெய்ஜிங் நகருக்கு மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் (எண்:370), 239 பயணிகளுடன் கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி புறப்பட்பட்டு சென்றது. இவர்களில் பெரும்பாலானோர் சீனர்கள். புறப்பட்ட சிறிது நேரத்தில் இந்த விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது. அந்த விமானம் வழக்கமான பாதையில் இருந்து விலகி தெற்கு இந்திய பெருங்கடல் நோக்கி சென்று விபத்துக்குள்ளாகியதாக செயற்கைகோள் தகவல்கள் தெரிவித்தன. பைலட் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது கடைசி வரை மர்மமாகவே இருந்தது.
அதிக செலவில் அந்த விமானத்தை தேடும் பணியில் பல நாடுகள் இறங்கின. ஆனால், விமானத்தின் இறக்கை பாகங்கள் சில மட்டுமே கிழக்கு ஆப்பிரிக்கா மற்றும் இந்திய பெருங்கடல் தீவுப் பகுதிகளில் கரை ஒதுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை. இதை தேடும் பணியில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த ஓசன் இன்பினிட்டி என்ற ரோபோட்டிக் நிறுவனம் கடந்த 2018-ம் ஆண்டு ஈடுபட்டது. ஆனால் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தற்போது அதே நிறுவனம் மலேசிய விமானத்தை மீண்டும் தேட முன்வந்துள்ளது. இது குறித்து மலேசிய அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான விமானத்தை கண்டுபிடித்தால் மட்டுமே 70 மில்லியன் டாலர் கட்டணம் செலுத்தப்படும். கண்டுபிடிக்க வில்லை என்றால், கட்டணம் கிடையாது என்ற நிபந்தனையின் கீழ், மாயமான விமானத்தை தேட மலேசிய அமைச்சரவை ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.