ஐக்கிய அரபு அமீரகத்தில் 25 இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங் நேற்று எழுத்துமூலம் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
வெளியுறவு அமைச்சகத்திடம் உள்ள தகவல்களின்படி, தற்போது வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகளின் எண்ணிக்கை 10,152 ஆக உள்ளது. இவர்களில் விசாரணை கைதிகளும் அடங்குவர்.
வெளிநாட்டு சிறைகளில் இருப்பவர்கள் உட்பட, வெளிநாடுகளில் உள்ள இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.
8 நாடுகளில் இந்தியர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. என்றாலும் தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த எண்ணிக்கை 25 ஆக உள்ளது.
சவுதி அரேபியாவில் 11, மலேசியாவில் 6, குவைத்தில் 3, இந்தோனேசியா, கத்தார், அமெரிக்கா, ஏமன் ஆகிய நாடுகளில் தலா ஒன்று என்ற எண்ணிக்கையில் மரண தண்டனை கைதிகள் உள்ளனர்.
இவர்கள் மேல்முறையீடு, கருணை மணு உள்ளிட்ட சட்டத்தீர்வுகளை பெறுவதற்கு இந்திய தூதரகங்கள் உதவி வருகின்றன. இவ்வாறு வெளியுறவு இணை அமைச்சர் கூறியுள்ளார்