எப்போதும் உடலின் பாகங்களில் தலைமுடிமீது மக்களின் கவனம் கூடுதலாக இருக்கும். பொடுகில் தொடங்கி நரைமுடி வரை அனைத்தையும் சரிசெய்ய வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்திவருகின்றனர். தற்போதைய நுகர்வு கலாசாரத்தில் தலைமுடிக்கான சீரம், ஷாம்பு, எண்ணெய் என அனைத்தும் பெரும் வியாபாரமாகிவிட்டது. இன்ஸ்டா பிரபலம், சீரியல் பிரபலம், சினிமா பிரபலம் என ‘பிரபலம்’ என்ற வரையரைக்குள் யாரெல்லாம் வருகிறார்களோ அவர்கள் எல்லோரும் இந்த முடியைக் காப்பாற்றுவது தொடர்பாக விளம்பரம் செய்துகொண்டே இருக்கிறார்கள்.

இதற்கு வயது வித்தியாசமெல்லாம் கிடையாது. அப்படியான ஒரு விளம்பரத்தால் கிட்டத்தட்ட 65 பேரின் கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. பஞ்சாபின் சங்ரூரில் உள்ள ஒரு கோவிலில் வழுக்கை தலையில் முடிமுளைக்கவைக்கிறோம் என விளம்பரம் செய்திருக்கின்றனர். அதற்காகவே சிறப்பு எண்ணெய் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி, அந்த எண்ணெய்யை வழங்கியிருக்கின்றனர். அந்த எண்ணெய் பயன்படுத்திய சிறிது நேரத்திலேயே பலருக்கும் கண் எரிச்சல், கண்ணீர் உள்ளிட்ட பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களில் பலரால் பார்க்கவே முடியவில்லை.
கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்த தனியார், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில், இது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ முகாமல்ல என்பதும், எந்த மருத்துவ சான்றிதழும் இல்லாமல், நிபுணர்கள் அனுமதி இல்லாமல் இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டதும் தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணையில் இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இந்தக் குற்றச் செயலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது. முடி மட்டுமல்ல, பளபளப்பான தோல், உடல் எடைக் குறைத்தல் போன்ற உடல் சார்ந்த நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் தேவை. மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை பயன்படுத்தாமல் இருப்பதே நமக்கு ஆரோக்யம்.