IPL 2025: கரோனா காலகட்டத்தில் பந்தில் எச்சிலை தேய்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை நீக்கி ஐபிஎல் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
IPL 2025: மும்பையில் ஐபிஎல் கேப்டன்கள் கூட்டம்
ஐபிஎல் 2025 தொடர் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கிறது. இதை முன்னிட்டு மும்பையில் உள்ள பிசிசிஐ அலுவலகத்தில் ஐபிஎல் நிர்வாகிகளுக்கும், 10 அணிகளின் கேப்டன்களும் இடையே சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பு மதியம் 12.30 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், சிலரின் வருகை தாமதமானதால் சற்று நேரம் கழித்தே சந்திப்பு தொடங்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில், முக்கிய முடிவாக கடந்த கரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பந்தில் எச்சில் தேய்க்கும் வழக்கத்திற்கு ஐசிசி தடைப்போட்டது. இதுவும் பந்துவீச்சாளர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தி பேட்டர்களுக்கு சாதகத்தை அளிக்கிறது என கூறப்பட்டது. இருப்பினும், நோய் தொற்று பரவுவதை தடுக்க இந்த விதி கொண்டுவரப்பட்டது.
IPL 2025: பந்தில் எச்சில் தேய்ப்பது ஏன்?
கிரிக்கெட் பந்தில் இரண்டு பகுதிகள் இருக்கும், அதனை தையல் போட்டு இணைந்திருப்பார்கள். இந்த பந்தில் ஒரு பகுதியை சொரசொரப்பாகவும், மற்றொரு பகுதியை பளபளப்பாகவும் வைப்பார்கள். சொரசொரப்பான பகுதி அதிக எடையுடனும், பளபளப்பான பகுதியில் சற்று எடை குறைவாகவும் மாறும்.
பந்தை ஸ்விங் மற்றும் ரிவர்ஸ் ஸ்விங் செய்வதற்காக இதை செய்வார்கள். அந்த வகையில், பந்தின் ஒரு பகுதியை பளபளப்பாக்க தொடையில் தேய்ப்பது, எச்சிலை தேய்ப்பது உள்ளிட்ட பழக்கங்களை நீண்ட காலமாக கிரிக்கெட் வீரர்கள் செய்வதை பார்த்திருப்பீர்கள். கரோனா காலகட்டத்தில் இதற்கு தடை விதிக்கப்பட்டது.
IPL 2025: முடிவெடுக்குமா ஐசிசி?
தற்போது இன்று நடந்த கேப்டன்கள் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டது. தற்போது இந்த தடையை நீக்க பல அணிகளின் கேப்டன் ஒப்புதல் தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது பந்துவீச்சு தரப்புக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் இருக்கிறது. இருப்பினும் ஐபிஎல் தொடரில் மட்டுமே இந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ஐசிசி இதுகுறித்து விரைவில் முக்கிய முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
IPL 2025: பனியின் தாக்கத்தை குறைக்க புதிய விதி…
இதுமட்டுமின்றி, இரவில் பனியின் தாக்கத்தை குறைக்க, இரவுப் போட்டிகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 11வது புது பந்தை பெற்றுக்கொள்ளலாம் என்ற விதி வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
புது பந்து என்றாலும் அது ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டவையாகவே இருக்கும். புத்தம் புதிய பந்தாக இருக்காது. இந்த விதி மாலை நேர போட்டிக்கு கிடையாது. பனியின் தாக்கத்தால் பந்துவீச்சாளர்களுக்கு பந்தை சரியாக பிடித்துப்போட இயலாது என்பதால் அந்த பிரச்னையை போக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.