ஐபிஎல் தந்த வெளிச்சத்தால் மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணிக்குத் தேர்வாகி, பார்டர் கவாஸ்கர் போன்ற மிக முக்கியமான டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி விளையாடிய வீரர் நிதிஷ் குமார் ரெட்டி. முதலில் பார்டர் கவாஸ்கர் தொடருக்கு அனுபவமில்லாத வீரர் எதற்கு என்று கேள்வியெழுப்பிய சுனில் கவாஸ்கர் உள்ளிட்டவர்களையெல்லாம், தனது ஆட்டத்தால் வாயடைத்தார்.

அந்தத் தொடரில், அதிக ரன்கள் அடித்த இரண்டாவது இந்திய வீரர் நிதிஷ் குமார் ரெட்டிதான். சீனியர் பேட்டர்களே தடுமாறிய போதிலும், மெல்போர்ன் மைதானத்தில் சதமடித்து அசத்தினார். தற்போது அதே ஆட்டத்தை ஐ.பி.எல்லில் வெளிப்படுத்தவும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், பார்டர் கவாஸ்கர் தொடரின்போது விராட் கோலியிடமிருந்து மறக்க முடியாத பரிசு பெற்ற விதத்தைப் பற்றி நிதிஷ் குமார் ரெட்டி பேசியிருக்கிறார்.

பாட்காஸ்ட் நிகழ்ச்சியொன்றில் இதனைப் பகிர்ந்த நிதிஷ் குமார் ரெட்டி, “ஒருமுறை லாக்கர் ரூம் அருகில், சர்ஃபராஸ் கானிடம் “உன்னுடைய ஷூ சைஸ் என்னவென்று” கோலி கேட்டார். அதற்கு, அவர் 9 என்றார். உடனே, கோலி என் பக்கம் திரும்பினார். அப்போது, எப்படியாவது சரியாக சொல்லிவிடவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். அது என்னுடைய சைஸ் இல்லையென்றபோதும், அவரின் ஷூ வேண்டும் என்ற ஆசையில் சைஸ் 10 என்று கூறியதும், ஷூவை என்னிடம் கொடுத்துவிட்டார். பிறகு, அடுத்த டெஸ்ட் போட்டியில் அந்த ஷூவை போட்டுகொண்டு சதம் அடித்தேன்.” என்று கூறினார்.