அடுத்த அதிரடி! – அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் ட்ரம்ப் கையெழுத்து

வாஷிங்டன்: அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் அதிபராக பொறுப்பேற்றதில் இருந்தே ட்ரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவற்றில் பெரும்பாலான நடவடிக்கைகளுக்கு செலவினங்களைக் குறைப்பதையே அவர் காரணமாகக் கூறி வருகிறார். இந்நிலையில் அமெரிக்க கல்வித் துறையைக் கலைக்கும் கோப்புகளில் கையெழுத்திட்டு பரபரப்பை கூட்டியுள்ளார் ட்ரம்ப்.

அதுமட்டுமல்லாமல் கல்வித் துறையை மாகாணங்கள் பட்டியலுக்கு மாற்றுவதற்கான பணிகளை வேகப்படுத்தும்படியும் கல்வித் துறை செயலாளருக்கு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஆனால் அதேவேளையில் சிறப்பு மாணவர்களுக்கான நிதித் திட்டங்களை அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கும் என்ற ஒரே ஒரு ஆறுதலை மட்டும் அதிபர் ட்ரம்ப் அளித்துள்ளார்.

பின்னணி என்ன? அமெரிக்க கல்வித் துறையின் கீழ் சுமார் 1 லட்சம் அரசுப் பள்ளிகளும், 30 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளின் 85 சதவீத செலவுகளை மாகாண அரசுகள் தான் செய்கின்றன. ஆனாலும், கல்விக் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கான கடன் தொகையை அமெரிக்க மத்திய கல்வித் துறை கவனித்து வருகிறது. இதன் மூலம் ட்ரில்லியன் டாலர்கள் கணக்கில் மாணவர்களுக்கு கடன் தொகை வழங்கப்படுகிறது. இது மத்திய கல்வித் துறைக்கு பெரும் சுமையாக இருக்கின்றது.

இந்நிலையில் தான் இந்த நிதிச் சுமையைக் குறைக்கும் நடவடிக்கையாக கல்வித் துறையைக் கலைத்து கல்வி சார்ந்த முழு பொறுப்பையும் மாகாண அரசுகளிடம் தள்ளிவிடும் ஆவணங்களில் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. குறிப்பாக குடியரசுக் கட்சி கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. கல்வியின் தரத்தை கண்காணிக்கும் ஒரு துறையை அதிபர் கலைப்பது என்ன மாதிரியான நடவடிக்கை என்று கடும் விமர்சனங்களை கல்வி ஆர்வலர்களும் முன்வைத்து வருகின்றனர்.

ஏற்கெனவே அரசு ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையில் கல்வித் துறையைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து கல்வித் துறையை கலைத்து நடவடிக்கை எடுத்துள்ளார் ட்ரம்ப்.

‘வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை’ – இந்த நடவடிக்கை குறித்து ட்ரம்ப் பேசுகையில், “இன்று நாம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். 45 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நடவடிக்கை. அமெரிக்க கல்வித் துறையை கலைக்கும் உத்தரவில் நான் கையெழுத்திடுகிறேன். கல்வித் துறையைக் கலைப்பது குழந்தைகளுக்கும், குடும்பங்களுக்கும் நன்மை சேர்க்கும். தோல்வியடைந்த ஓர் அமைப்பின் பிடியில் இருந்து அவர்கள் விடுபடுவார்கள். கல்வியை நாம் மாகாண அரசுகளின் வசம் ஒப்படைக்கிறோம். கல்வியின் பொறுப்பு அவர்களுடையதே. இந்த முடிவு பொது அறிவின் பேரின் எடுக்கப்பட்டது. இது நிச்சயமாக நன்மை பயக்கும். உலக நாடுகளை ஒப்பிடுகையில் அமெரிக்கா தான் மாணவர்கள் மீது அதிகம் செலவிடுகிறது. ஆனால் இங்குள்ள 8-ம் நிலை கல்வி பயிலும் மாணவர்களில் 70 சதவீதம் பேருக்கு வாசிக்கத் தெரியவில்லை. கணித அறிவும் இல்லை. ஆனால் கல்வித் துறையின் செலவு மட்டும் 600 சதவீதமாக அதிகரித்துள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மீதான செலவினங்கள் அதிகமாக உள்ளது. இந்நிலையில் இந்த நடவடிக்கை மிகவும் பொருத்தமானது.” என்று கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.