புதுடெல்லி: உ.பி.யின் சம்பலில் ‘நேஜா’ எனும் பெயரில் ஆண்டுதோறும் முஸ்லிம்கள் ஒரு விழா நடத்துகின்றனர். இந்த விழாவானது சையது சாலார் மசூத் காஜி என்பவர் பெயரில் கடந்த 47 ஆண்டுகளாக நடக்கிறது. ஆனால், இந்த ஆண்டு மார்ச் 25-ல் தொடங்க இருந்த விழாவுக்கு சம்பல் மாவட்ட காவல் துறை அனுமதி அளிக்க மறுத்துள்ளது. இதற்கு நம் நாட்டின் மீது படையெடுத்தவர்களையும், கொள்ளையடித்தவர்களையும் கொண்டாட தேவையில்லை” என்று காரணம் கூறியுள்ளது.
கஜ்னாவியில் இருந்து இந்தியாவுக்கு படையெடுத்து வந்த முஸ்லிம் மன்னர் முகமது கஜினியின் சகோதரி மகன்தான் சாலார் மசூத் காஜி. கஜினியின் படை தளபதியாகவும் இருந்தார். கடந்த 1206-ம் ஆண்டு சோம்நாத் மீது படையெடுத்து கஜினி முகமது கொள்ளையடித்ததாக வரலாற்று பதிவுகள் உள்ளன. அப்போது கஜினியுடன் அவரது மருமகன் சாலார் மசூதும் இருந்துள்ளார்.
பிறகு ஒரு தனிப்படையுடன் தற்போதைய உ.பி.க்கும் சாலார் மசூத் வந்தார். சம்பலில் ஆட்சி செய்த ராஜபுதன மன்னனை கொன்றார். இந்த வெற்றியின் நினைவாகவே அவரது பெயரில் சம்பலிலும், அருகிலுள்ள முராதாபாத் மற்றும் சஹரான்பூரிலும் நேஜா விழா நடத்தப்படுகிறது. பிறகு சாலார் மசூத் நேபாள எல்லையில் உள்ள பைரைச்சிற்கும் சென்றார்.
இன்றைய உ.பி.யில் உள்ள பைரைச்சில் அப்போது குறுநில மன்னர் சுஹல்தேவ் ஆட்சி இருந்தது. தம்முடன் மேலும் 21 குறுநில மன்னர்களின் படைகளை சேர்த்து சாலார் மசூதை எதிர்கொண்டார் சுஹல்தேவ். கடந்த 1034-ல் நிகழ்ந்த போரில் சுஹல் தேவ் படையால் சாலார் மசூத் கொல்லப்பட்டார். அப்போது பைரைச்சிலேயே சாலார் மசூத் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த கல்லறை மீது 1250-ல் துக்ளக் வம்சத்தின் நசிரூதீன் மகமூத், தர்கா கட்டினார். தற்போது, முஸ்லிம்கள் இடையே பிரபலமான சாலார் மசூத் தர்காவுக்கு ஆண்டுதோறும் உருஸ் எனும் சந்தனக்கூடு விழா நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு நிரந்தர தடைவிதிக்க கோரி இந்துத்துவா அமைப்பினர் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் சஹரான்பூர் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் கூறும்போது, “மவுலானா ஹசரத் சாலார் மசூத் ஒரு சூபி புனிதராக இருந்தார். இதனால், அவரது பெயரில் நடக்கும் பாரம்பரிய விழாக்களுக்கு அரசியல் காரணங்களுக்காக தடை விதிக்கின்றனர். கடந்த 2023 முதல் நேஜாவை சத்பவனா விழாவாக கொண்டாடினர். இந்த ஆண்டும் அதே வகையில் கொண்டாட அனுமதி வழங்கவில்லை” என்றார்.