அஸ்திரம் விமர்சனம்: சோதிக்கும் சுழலில் மாட்டிய திரைக்கதை; இந்த ஐடியாவுக்கு இவ்ளோவா குழப்புவீங்க?

குற்றவாளிகளைப் பிடிக்கச் சென்ற இடத்தில் தோள்பட்டையில் குண்டு பாய்ந்து, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் கொடைக்கானலில் இன்ஸ்பெக்டராக இருக்கும் அகிலன் (ஷ்யாம்). இந்தச் சூழலில், பூங்காவில் ஒருவர் தானாக முன்வந்து வயிற்றைக் கிழித்து தற்கொலை செய்து கொள்கிறார். அவர் கிழித்துக் கொண்ட விதம் ‘ப்ளஸ் +’ குறியீட்டு முறையில் இருக்கிறது. இதைத் தொடர்ந்து, இன்னும் இரண்டு தற்கொலைகள் இதே பாணியில் நடைபெறுகின்றன.

இறந்த மூன்று நபர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லாமல் இருக்க, வழக்கைத் திரைமறைவிலிருந்து விசாரிக்கிறார் அகிலன். இந்த ‘கொலை’களின் பின்னணி என்ன என்பதை அவர் கண்டறிந்தாரா என்பதே ‘அஸ்திரம்’ படத்தின் கதை.

அஸ்திரம் விமர்சனம்

புரியாத புதிராக இருக்கும் வழக்குக்குத் தேவையான எதுவும் விளங்கவில்லை என்ற உணர்வைச் சிறப்பாகக் கொடுத்திருக்கும் ஷ்யாம், விசாரணைக் காட்சிகளில் இன்னும் கூடுதல் சிரத்தை எடுத்திருக்கலாம். அவருடன் உதவியாளராகக் கதை முழுக்கப் பயணிக்கும் கதாபாத்திரமாக வரும் ரஞ்சித் டி.எஸ்.எம், அழுத்தமான குணச்சித்திர பாத்திரமாகச் சோபிக்கத் தவறுகிறார். பெரும்பாலான காட்சிகளில் கேமராவை வெறுமனே பார்த்துக் கொண்டே இருக்கும் நிராவுக்கு டெம்ப்ளேட் தமிழ் சினிமா நாயகி கதாபாத்திரம்.

மற்றொரு துணைப் பாத்திரத்தில் வரும் வெண்பாவுக்கும் பெரிதாக வேலையில்லை. பிளாஷ்பேக் பகுதியில் நடித்துள்ள குழந்தை நட்சத்திரம் விதேஷ் ஆனந்த்திடம், இயக்குநர் இன்னும் சிறப்பான நடிப்பை வாங்கியிருக்கலாம். முக்கால்வாசி நேரம் முறைத்துக் கொண்டே இருக்கிறார் விதேஷ். இவர்கள் தவிர, ஜீவா ரவி, நிழல்கள் ரவி ஆகியோரும் வந்து போகிறார்கள்.

சுந்தரமூர்த்தி கே.எஸ். இசையில் பாடல்கள் பெரிதாக வேலை செய்யவில்லை. புதிர்களைப் போடுகிற திரைக்கதைக்குப் பின்னணி இசை சற்றே உதவியிருக்கிறது. கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவில், கேமரா பல இடங்களில் வெவ்வேறு கோணங்களுக்குச் செல்லாமல், ஒரே மாதிரியான கோணங்களோடு அலுப்படையச் செய்கிறது. ஒளியுணர்விலும் ஒரு திரில்லர் படத்துக்கான டோன் மிஸ்ஸிங்! இருப்பினும், இரவு நேரக் காட்சிகள், பிளாஷ்பேக் ஆகிய பகுதிகளில் பாஸ் ஆகிறார். முன்னுக்குப் பின் நகரும் திரைக்கதையைக் குழப்பமில்லாமல் கோர்க்க முயன்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி. இருப்பினும், நீண்டு கொண்டே செல்லும் வளவளக் காட்சிகளை இன்னும் கத்தரித்திருக்கலாம்.

அஸ்திரம் விமர்சனம்

கதை ஆரம்பிக்கும் விதமே ஒரு தற்கொலையும், அதில் ஒரு புதிரும் என இருப்பது ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால், விசாரணை போகும் விதமும், அதற்காக அமைக்கப்பட்ட ஸ்டேஜிங்கும் நம்பகத்தன்மையில்லாமல், வந்த ஆர்வத்துக்கு ‘டாடா’ காட்டுகிறது. ஜப்பான் மன்னர் கதை, சதுரங்க விளையாட்டு என ஜெகன் எம்.எஸ். திரைக்கதையின் ஐடியாகள் புதிதாகத் தோன்றினாலும், சதுரங்க ஆட்டத்தின் காய்களைக் கவனமாக நகர்த்தி மூளைக்கு வேலை கொடுக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் மிஸ்ஸாவதால் அதுவே படத்தின் பெரிய மைனஸ் ஆகிறது.

பிளாஷ்பேக் பகுதி, கொடைக்கானல் மலையில் ஏறும் கொண்டை ஊசி வளைவில் சுற்றிக் கொண்டே இருக்கும் உணர்வைக் கொடுத்து, அயர்ச்சியைத் தருகிறது. கதாபாத்திரங்கள் எதுவும் மனதில் நிற்காததால், யாருக்காக நாம் பரிதாபப்படுவது, யாருடன் பயணிப்பது என்ற சந்தேகம் படம் முழுக்க வியாபித்திருக்கிறது. திரில்லர் படங்களின் மிகப்பெரிய பலமாக இருக்கும் ‘அடுத்து என்ன’ என்கிற இலக்கணம், முற்றிலுமாக உடைக்கப்பட்டு, “அடுத்து என்னவாக இருந்தால் என்ன” என்று நம்மை எண்ண வைக்கிறது படம்.

அஸ்திரம் விமர்சனம்
அஸ்திரம் விமர்சனம்

மொத்தத்தில், இந்த ‘அஸ்திரம்’ சின்ன சின்ன ஐடியாகளாக வேலை செய்தாலும், நடிப்பு, திரைக்கதை, வசனம் ஆகிய எந்த இடங்களிலும் சுட்டெரிக்காமல் பார்வையாளர்களைச் சுட்டு விடும் அஸ்திரமாகவே முடிந்துபோகிறது.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.