புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி பிரிவுத் தலைவராக முன்னாள் அமைச்சர் சவுரப் பரத்வாஜும், கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா பஞ்சாப் மாநில பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சி சந்தித்தத் தோல்வியைத் தொடர்ந்து இந்த மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலின் இல்லத்தில இன்று (வெள்ளிக்கிழமை) கட்சியின் அரசியல் விவகாரக் குழுவின் கூட்டம் நடந்தது. அக்கூட்டதில் இந்த மாற்றங்களுக்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. ஏற்கனவே ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி தலைவராக இருந்த கோபால் ராய்க்கு பதிலாக அப்பதவிக்கு சவுரப் பரத்வாஜ் நியமிக்கப்பட்டுள்ளார். மணீஷ் சிசோடியா பஞ்சாப் மாநிலத்தின் பொறுப்பாளராக மாறுகிறார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் அது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சி பொறுப்புகளில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்களை அறிவித்த, ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளரும் (அமைப்பு), மாநிலங்களவை உறுப்பினரான சந்தீப் பதாக் கூறுகையில், “டெல்லி பிரிவு தலைவராக இருந்த கோபால் ராய்க்கு குஜராத்தின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கட்சி அங்கு தன்னை விரிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறது.
அதேபோல் பங்கஜ் குப்தா கோவா பிரிவின் பொறுப்பாளராகவும், மேக்ராஜ் மாலிக், ஜம்மு காஷ்மீர் பிரிவின் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். எனக்கு சத்தீஸ்கர் பிரிவின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற ஆம் ஆத்மியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில், டெல்லி பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை, இலவச கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பாஜக இன்னும் நிறைவேற்றாத தேர்தல் வாக்குறுதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.”என்று தெரிவித்தார்.