‘உடல், மனம் ரீதியாக பாதிப்பு’ – பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மிசா பாரதி விமர்சனம்

புதுடெல்லி: பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்த விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்ஜேடி எம்.பி. மிசா பாரதி, முதல்வரின் உடல் மற்றும் மனநலம் குறித்து கேள்வி எழுப்பினார். மேலும் பிஹார் யாருடைய கையில் இருக்கிறது என்பது குறித்து பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து லாலு பிரசாத்தின் மகளும், எம்.பி.யுமான மிசா பாரதி கூறுகையில், “தேசிய கீதம் பாடப்பட்ட போது பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தெளிவாக இல்லை. அவர் மன ரீதியாக சரியாக உள்ளாரா என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் நான் கேட்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அவர் பெண்கள் மற்றும் குழந்தைகளை அவமதித்து வருகிறார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் பிஹார் யாருடைய கைகளில் இருக்கிறது என்பது குறித்து சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆர்ஜேடிவின் தேஜஸ்வி யாதவ் பாட்னாவில் நடந்த கூட்டம் ஒன்றில் தேசிய கீதம் பாடும் போது பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் பேசிக்கொண்டிருக்கும் வீடியோவினை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் வெளியிட்டுள்ள பதிவில், “முதல்வர் அவர்களே தேசிய கீதத்துக்காவது மரியாதை கொடுங்கள். இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை தினமும் நீங்கள் அவமானப்படுத்துகிறீர்கள்.

நீங்கள் ஒரு மிகப்பெரிய மாநிலத்தின் முதல்வர் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஒரு சில நிமிடங்கள் கூட உங்களால் மனம், உடல் ரீதியாக நிலையாக இருக்க முடியவில்லை. நீங்கள் இப்படியான மயக்க நிலையில் இருப்பது மாநிலத்துக்கு மிகவும் கவலையளிக்க கூடிய விஷயம். பிஹாரை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தாதீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.

தேஜஸ்வி பகிர்ந்துள்ள வீடியோவில், தேசிய கீதம் பாடப்பட்டுக்கொண்டிருக்கும் போது முதல்வர் நிதிஷ் குமார் அருகில் இருக்கும் அதிகாரியின் தோளில் தட்டி, அவருடன் பேச விரும்புகிறார். ஒரு கட்டத்தில் சிரித்தபடியே கீழே இருக்கும் யாரையோ நோக்கி கை கூப்பி வணங்குகிறார்.

ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில், “தேசிய கீதம் அவமதிக்கப்படுவதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது. பிஹார் மக்களே இன்னும் ஏதாவது மிச்சமிருக்கிறதா? ” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இதனிடையே ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த முகேஷ் ரவுஷான் நிதிஷ் குமார் மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி பாட்னாவில் போராட்டம் நடத்தினார்.

பிஹாரில் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.