உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கும் மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025-2026-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த 14-ம் தேதி தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து பட்ஜெட் மீது கடந்த 16-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 4 நாட்கள் விவாதம் நடைபெற்றது. இந்நிலையில், சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கும் சந்தேகங்களுக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று பதிலளித்துப் பேசியதாவது:
இந்தியாவின் ஒருசில மாநிலங்களுக்கு மட்டுமான குறிப்பாக உத்தரப்பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களுக்கு மட்டுமேயான நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை என்பது தமிழகத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் நன்மை செய்யக்கூடிய நோக்கில் அமைந்திருக்கக் கூடியது. தமிழ்மொழியைவிட வடமொழிக்கும், இந்தி மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்து, மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்ளக்கூடிய மத்திய அரசு ஒருபுறம் இருக்கிறது. ஆனால், தமிழக அரசோ பழங்குடி மக்கள் பேசக்கூடிய அந்தப் பழங்குடி மொழிகளுக்கும் உரிய கவனம் கொடுக்கக்கூடிய ஓர் அரசாக இருந்து வருகிறது.
மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்துக்கு ரயில்வே திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதி ரூ.19,068 கோடி மட்டும்தான். ஆனால், உத்தரப்பிரதேசத்துக்கு 2025-2026-ம் நிதி ஆண்டில் ஒதுக்க உத்தேசித்திருக்கக்கூடிய தொகை மட்டும் ரூ.19,858 கோடி. இப்படி நாம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்தாலும்கூட இந்தியாவிலே மிக அதிகமான மதிப்பீட்டிலான சென்னை இரண்டாம் கட்டமெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசின் நிதி உதவியின்றி, தன்னுடைய சொந்த நிதி ஆதாரங்களைக் கொண்டு தமிழக அரசு செயல்படுத்த தொடங்கியது. தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து வற்புறுத்திய பின்னர்தான், மத்திய அரசு தனது பங்கினை தமிழகத்துக்கு வழங்கியது.
தொடர்ந்து எல்லா இடங்களிலும் முன்னேறி தமிழகத்தில் பரவலான தொழில் பெருக்கத்தை அரசு தொடர்ந்து உறுதி செய்து வருகிறது. 80 ஆயிரம் பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிற்பூங்காக்கள் குறித்த அறிவிப்பும் பட்ஜெட்டிலே இடம்பெற்றிருக்கிறது. அதைப்போல, புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த 4 ஆண்டுகளில் 2105-லிருந்து 5 மடங்கு அதிகரித்து 10,649 ஆக உயர்ந்துள்ளது. புத்தொழில் துறையில் இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.
ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதா மாதம் ரூ.1,000 தொடர்ந்து கிடைக்கும் வகையில் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தைச் செயல்படுத்தி வருவதை நாடே வியந்து பாராட்டுகிறது. கலைஞர் கனவு இல்லம், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன், விடியல் பயணம் என பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தியதற்குப் பிறகும் கூட, நாம் வருவாய்ப் பற்றாக்குறையை ரூ.68,000 கோடியிலிருந்து ரூ.41,000 கோடியாகக் குறைத்திருக்கிறோம்.
மத்திய பாஜக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட விஸ்வகர்மா திட்டத்துக்கு மாறாக அவரவர் விருப்பப்பட்ட கைவினை பொருட்களை உருவாக்குவதற்காகவும், நவீன முறையில் செயலாற்றுவதற்காகவும் கலைஞர் கைவினைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுவரையில் 7,297 நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெறப்பட்டு ரூ.28 கோடி ரூபாய் மானியத்தோடு ரூ.138 கோடி செலவில் இந்தத் திட்டம் விரைவில் தொடங்கிவைக்கப்பட உள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கை கணினி அல்லது மடிக்கணினி வழங்க முதற்கட்டமாக இந்த ஆண்டு ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கியிருக்கிறோம். அடுத்த ஆண்டு மேலும் ரூ.2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும். தரமான மடிக்கணினியை வழங்க அரசு உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.