புதுடெல்லி: ஊழலை மறைக்க சிலர் மொழிப் பிரச்சினையை பயன்படுத்துகிறார்கள் என்று மாநிலங்களவையில் குற்றம்சாட்டிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம்” என்று கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரில் விளக்கம் அளித்து உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உள்துறை அமைச்சகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பயங்கரவாதம், ஜம்மு காஷ்மீர், நக்சலிசம், மொழிப் பிரச்சினை உள்ளிட்டவை குறித்து பேசியது: “உள்துறை அமைச்சகத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றம் பிரதமர் மோடியால் கொண்டுவரப்பட்டது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை மாநில வரம்புக்கு உட்பட்டது. அதேநேரத்தில், போதைப்பொருள் கடத்தல், ஹவாலா உள்ளிட்ட சில பிரச்சினைகள் மாநில எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை. இதைச் சமாளிக்க, உள்துறை அமைச்சகத்தில் மாற்றம் அவசியமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த மாற்றங்கள், பிரதமர் நரேந்திர மோடியால் கொண்டு வரப்பட்டுள்ளன.
பூஜ்ஜிய சகிப்புத்தன்மை: பயங்கரவாதத்துக்கு எதிராக பிரதமர் மோடி பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கொண்டு வந்தார். கடந்த காலங்களில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும், பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. இதனால், பயங்கரவாதம் நீடித்தது. ஆனால் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, புல்வாமா தாக்குதல்களுக்குப் பிறகு 10 நாட்களுக்குள், நாம் பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல்களை நடத்தினோம். உலகம் முழுவதும் தங்கள் எல்லைகளையும் பாதுகாப்புப் படைகளையும் பாதுகாக்க இஸ்ரேல், அமெரிக்கா எனும் 2 நாடுகள் மட்டுமே எப்போதும் தயாராக இருக்கும். இந்த பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டின் பெயரைச் சேர்த்துள்ளார்.
காஷ்மீரில் புதிய சகாப்தம்: அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தொலைநோக்குப் பார்வை கொண்டவர்கள். 370-வது பிரிவை அகற்றுவதற்கான விதைகளை அந்த விதியிலேயே அவர்கள் விதைத்தார்கள். இதன் காரணமாக ஆகஸ்ட் 5, 2019 அன்று சட்டப்பிரிவு 370-ஐ அகற்றும் நடவடிக்கை பிரதமர் மோடியால் மேற்கொள்ளப்பட்டது. காஷ்மீரை நாட்டின் பிற பகுதிகளுடன் ஒன்றாக மாற்றும் செயல்முறை அப்போதுதான் தொடங்கியது.
அனைத்து விதிகளும், அரசியலமைப்பும் தற்போது காஷ்மீருக்கும் பொருந்தும். முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியின் ஒரு புதிய சகாப்தம் ஜம்மு காஷ்மீரில் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, காஷ்மீரில் நள்ளிரவில் திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. வெளிநாட்டு பிரமுகர்கள் காஷ்மீருக்குச் சென்று, மகிழ்ந்து, எந்த அசம்பாவிதமும் இல்லாமல் திரும்பிச் செல்கின்றனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்ததுபோல் இல்லாமல், தற்போது கடையடைப்பு, கல் எறிதல், உயிரிழப்புகள் ஆகியவை குறைந்துவிட்டன.
மார்ச் 21, 2026-க்குள் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவார்கள்: மார்ச் 21, 2026-க்குள் நாட்டில் நக்சலைட்டுகள் ஒழிக்கப்படுவார்கள். இந்தப் பிரச்சினைக்காகப் போராடி துன்பங்களைத் தாங்கியவர்களுக்கு மீண்டும் நான் எனது மரியாதையை செலுத்துகிறேன். மாவோயிஸ்டுகளின் தாக்குதல்கள் காரணமாக சில இடங்கள் பின்தங்கியிருக்கலாம். நக்சலைட் பகுதிகளில் சாலை இணைப்பு மற்றும் இணைய அணுகல் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய வங்கிகள் மற்றும் ஏடிஎம்கள் திறக்கப்பட்டுள்ளன. பல இளைஞர்கள் தங்கள் ஆயுதங்களை விட்டுவிட்டு பிரதான நீரோட்டத்தில் இணைந்துள்ளனர். அசாம் போன்ற மாநிலங்களில் தீவிரவாதக் குழுக்களுடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.
மணிப்பூர் அமைதி: மணிப்பூரில் தற்போது அமைதி நிலவுகிறது. இன மோதல்களில் ஈடுபட்டுள்ள பிரிவினர்களுக்கு இடையே உள்ள இடைவெளி பேச்சுவார்த்தை மூலம் குறைக்கப்படுவதை நாங்கள் உறுதி செய்வோம்.
தமிழக அரசியல்: டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் அவர்களின் தாய்மொழிகளில் மட்டுமே கடிதங்களைப் பரிமாறிக் கொள்வேன். சிலர் தங்கள் ஊழலை மறைக்க மொழிப் பிரச்சினையை எழுப்புகிறார்கள். நாங்கள் மொழிகளுக்காகப் பாடுபட்டுள்ளோம். இந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்துள்ளோம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தமிழில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை உறுதி செய்வோம். நாடு முன்னேறியுள்ளது, முன்னேற்றம் பற்றிப் பேசுகிறது. ஊழலை மறைக்க நீங்கள் மொழியைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதை நாங்கள் அம்பலப்படுத்துவோம். இந்தி அனைத்து இந்திய மொழிகளுக்கும் ஒரு நண்பன். அது பிற இந்திய மொழிகளை வலிமையாக்குகிறது” என்று அமித் ஷா உரையாற்றினார். டாஸ்மாக் விவகாரம் வலுத்துள்ள சூழலில், ஊழலை மறைக்க மொழிப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்று திமுகவையே அவர் மறைமுகமாக சாடியுள்ளார்.