நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் கேன் வில்லியம்சன். இவர் 2015ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தொடங்கினார். ஹதராபாத் அணிக்காக விளையாட தொடங்கிய அவர், 2022ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடினார். கேப்டனாக 2018 முதல் 2022 வரை ஹதராபாத்தை வழிநடத்தினார்.
ஐபிஎல்லில் அதிக ரன்கள்
2016ஆம் ஆண்டு ஹதராபாத் அணி கோப்பையை வென்றது. அந்த அணியின் ஒரு பகுதியாக கேன் வில்லியம்சன் இருந்தார். பின்னர் 2018ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹதராபாத் அணியை இறுதி போட்டி வரை அழைத்துச் சென்றார். அந்த தொடரில் அதிக ரன்கள் எடுத்தவரும் அவர் தான். 17 இன்னிங்ஸ்களில் 735 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பிறகு 2023 மற்றும் 2024ஆம் ஆண்டு குஜராத் அணியில் இடம் பிடித்திருந்தார்.
மேலும் படிங்க: கே.எல்.ராகுல் இல்லை.. அப்போ டெல்லி அணியின் தொடக்க வீரர்கள் யார்? இம்பேக்ட், பிளேயிங் XI என்ன?
கேன் வில்லியம்சன் அன்சோல்ட்
இச்சூழலில் ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு அனைத்து அணிகளிலும் இருந்து வீரர்கள் கழற்டி விடப்பட்டனர். அந்த வகையில், கேன் வில்லியம்சன் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து கழற்டிவிடப்பட்டார். இதையடுத்து ஐபிஎல்லின் மெகா ஏலம் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. அதில் கேன் வில்லியம்சன்னை வாங்க எந்த அணியும் முன் வரவில்லை. அவர் அன்சோல்ட் வீரராக மாறினார். இவரை போலவே டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால் ஸ்டீவ் ஸ்மித், ஃபின்ன் ஆலென், டெவால்ட் ப்ரூவிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்களும் வாங்கப்படவில்லை. இது ரசிகர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கேன் வில்லியம்சன்னின் புதிய அவதாரம்
இந்த நிலையில், கேன் வில்லியம்சன் நடப்பு ஐபிஎல்லில் வீரராக அல்லாமல் தொடரின் வர்ணனையாளராக களம் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவரை போல இந்திய அணியின் முன்னாள் வீரர் ஷிக்கர் தவானும் வர்ணனையாளராக களம் இறங்குகிறார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. கேன் வில்லியம்சன் இதுவரை 79 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 2128 ரன்கள் அடித்த அவர், அதிகபட்சமாக 89 ரன்களை விளாசி உள்ளார். இதில் 18 அரைசதங்களும் அடங்கும்.
நடப்பு ஐபிஎல் தொடர் நாளை (மார்ச் 22) தொடங்க உள்ளது. முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. இப்போட்டி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. தொடரின் முதல் போட்டி என்பதால், கலை மற்றும் இசை நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
மேலும் படிங்க: ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை.. சென்னை மாநகராட்சி முடிவு