கொல்கத்தா,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் நாளை தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
ஒவ்வொரு அணியும் தலா 14 லீக் ஆட்டத்தில் விளையாடும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டுள்ளது. லீக் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும். மே 18ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைகிறது. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் மே 20ம் தேதி தொடங்குகிறது.
இந்த தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி இந்த முறை அஜிங்யா ரகானே தலைமையிலும், பெங்களூரு அணி ரஜத் படிதார் தலைமையிலும் களம் இறங்குகிறது.
இந்நி்லையில் நடப்பு ஐ.பி.எல் தொடரில் புள்ளிப்பட்டியலில் ஆர்.சி.பி. அணி கடைசி இடத்தை தான் பிடிக்கும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, நான் ஆர்.சி.பி ரசிகர்களுக்கோ அல்லது விராட் கோலிக்கோ எதிரானவன் கிடையாது. ஆனாலும் என்னை பொறுத்தவரை இந்த தொடரில் அந்த அணி தான் கடைசி இடத்தை பிடிக்கும். ஏனெனில் ஆர்.சி.பி அணியில் நிறைய இங்கிலாந்து வீரர்கள் இருக்கிறார்கள்.
ஆர்.சி.பி அணி மீது எனக்கு எந்த விரோதமும் கிடையாது. ஆனால் ஒரே அணியை சேர்ந்த இத்தனை வீரர்களை வாங்கியதன் காரணம் என்ன? என்பதை ரசிகர்கள் தான் கேட்க வேண்டும். அதேபோன்று இங்கிலாந்து வீரர்கள் அதிகளவில் இருப்பதனாலே அவர்களுக்கு கடைசி இடத்திற்கு தள்ளப்படுவார்கள் என நினைக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.