கேரளா, கர்நாடகா தலைவர்களை வரவேற்கும் ஸ்டாலினை கண்டித்து பாஜக இன்று கருப்பு கொடி போராட்டம்: அண்ணாமலை அறிவிப்பு

தமிழகத்தை வஞ்சித்து வரும் கர்நாடகா, கேரளா மாநில தலைவர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும், முதல்வர் ஸ்டாலினை கண்டித்து தமிழக பாஜக சார்பில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெறும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. ஊழல் இல்லாத துறைகளே இல்லை எனும் அளவுக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருக்கிறது. சாமானிய மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் கூட பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம் தாழ்ந்திருக்கிறது. படுகொலைகள் நடக்காத நாளே இல்லை. பாலியல் குற்றங்கள் நிகழாத நகரமே இல்லை. ஆனால், இவற்றைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தினந்தோறும் விளம்பர ஷூட்டிங் நடத்தி நாடகமாடிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு எதிராக பொதுமக்களிடையே எழுந்துள்ள கோபத்தையும், எதிர்ப்பையும் மடைமாற்ற, பிற மாநிலங்களில் உள்ள இண்டியா கூட்டணிக் கட்சியினரையும் துணை சேர்த்து, மார்ச் 22-ம் தேதி (இன்று) ஒரு மெகா நாடகம் அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறார் ஸ்டாலின். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், ஒரு கற்பனையான பயத்தினை உருவாக்க முயற்சி செய்கிறார்.

கர்நாடக அரசிடம் காவிரி நீரைத் திறந்துவிடச் சொல்ல, முதல்வர் ஸ்டாலினுக்கு வாய் வரவில்லை. மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று கூறிய கர்நாடக மாநிலத் துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு தான் வாழிய பாடி வரவேற்கிறது திமுக. முல்லை பெரியாறு அணையில் ஆண்டாண்டு காலமாகத் தமிழகத்துக்குத் துரோகம் செய்து வருகிறது கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசு. தென்காசி மக்களுக்குப் பயன்படும் செண்பகவல்லி அணையிலும் தொடர்ந்து பிரச்சினை மட்டுமே செய்து வருகிறது கேரள மாநிலம்.

இதுதவிர தமிழகத்தில் கோவை, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி என எல்லை மாவட்டங்களில் இருந்து கனிம வளங்கள் அனைத்தும் கேரள மாநிலத்துக்குக் கடத்தப்படுகின்றன. நமது எல்லை மாவட்டங்களில் மருத்துவக் கழிவுகளை வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை ஒரு குப்பைக் கிடங்காகப் பார்க்கும் கேரள முதலமைச்சருக்குத் தான் சிவப்புக் கம்பளம் விரிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

தொடர்ந்து தனது இண்டியா கூட்டணிக் கட்சியினருக்காக, தமிழக மக்கள் நலனுக்கு விரோதமாகச் செயல்படும் ஸ்டாலினை கண்டித்து, மார்ச் 22-ம் தேதி தமிழக பாஜக சார்பில், கருப்புக் கொடி காட்டும் போராட்டம் நடைபெறும். காலை 10 மணிக்கு, பாஜகவினர் தங்களது வீட்டு முன்பாக நின்று, தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக, கேரள மாநிலத் தலைவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பளிக்கும் முதல்வர் ஸ்டாலினை கண்டித்து, கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.