IPL 2025 KKR vs RCB: ஐபிஎல் தொடரின் 18வது சீசன் நாளை (மார்ச் 22) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதுகின்றன.
IPL 2025 KKR vs RCB: தேறுமா கேகேஆர்…?
நடப்பு சாம்பியன் கேகேஆர் அணியில் கடந்தாண்டு கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் இல்லை. அதேபோல், அணியின் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர், பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் உள்ளிட்டோரும் தற்போது இல்லை. இருப்பினும், கடந்தாண்டு அந்த அணி கோப்பையை அடிக்க உதவிய சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், ரஸ்ஸல், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகிய 6 பேரும் தற்போதைய அணியிலும் தொடர்கின்றனர் எனலாம்.
IPL 2025 KKR vs RCB: புது வீரர்களுடன் ஆர்சிபி
அதேபோல், கடந்தாண்டு 4வது இடத்தை பிடித்த ஆர்சிபி அணி விராட் கோலி, ரஜத் பட்டிதார், யஷ் தயாள் ஆகியோரை மட்டுமே தக்கவைத்தது. கடந்தாண்டு விக்கெட் கீப்பர் பேட்டராக விளையாடிய தினேஷ் கார்த்திக், இம்முறை பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ரஜத் பட்டிதார் கேப்டனாக்கப்பட்டுள்ளார். கொல்கத்தாவில் மழை வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், நாளைய போட்டி மழையால் பாதிக்கப்படவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
IPL 2025 KKR vs RCB: ஆர்சிபியின் அந்த 3 வீரர்கள்
இந்நிலையில், ஆர்சிபி அணி ரசிகர்கள் முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சிறப்பாக தொடரை தொடங்க வேண்டும் என விருப்பப்படுவார்கள். அப்படி ஆர்சிபி அணி முதல் போட்டியில் இருந்தே வெற்றிவாகை சூட வேண்டும் என்றால் விராட் கோலி, ஹசில்வுட் ஆகியோரை தாண்டி இந்த 3 வீரர்களும் சிறப்பாக செயலாற்ற வேண்டும். அந்த 3 பேர் குறித்து இங்கு காணலாம்.
IPL 2025 KKR vs RCB: ரஜத் பட்டிதார்
கேப்டனாக பொறுப்பு ஒருபுறம் இருக்க, இந்த சீசனில் இவர் அதிக ரன்களை அடிப்பதே ஆர்சிபி அணிக்கு இன்னும் பெரியளவில் கைக்கொடுக்கும் எனலாம். மிடில் ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ரன்களை குவிக்க ரஜத் பட்டிதார்தான் ஆர்சிபிக்கு துருப்புச்சீட்டாக இருப்பார்.
விராட் கோலி – பில்ட் சால்ட் ஜோடி சிறப்பாக விளையாடி பவர்பிளேவில் ரன்களை குவித்துவிட்டால் நம்பர் 3இல் ரஜத் பட்டிதார் வர வேண்டும். விரைவாக விக்கெட் விழுந்தால் நம்பர் 3இல் தேவ்தத் படிக்கல் போன்றவரை இறக்கிவிட்டு, இவர் நம்பர் 4இல் வர வேண்டும். அப்போதுதான் இவர் ஜொலிக்க முடியும்.
IPL 2025 KKR vs RCB: ரஷிக் சலாம்
ஹசில்வுட், யாஷ் தயாள், புவனேஷ்வர் குமார் என பலமும், அனுபவமும் வாய்ந்த வேகப்பந்துவீச்சு கூட்டணி இருந்தாலும் சின்னசாமி மைதானத்தில் டெத் ஓவர்களில் ரன்களை கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியமாகும். டெல்லி அணியில் இவர் கடந்தாண்டு விளையாடிய நிலையில், டெல்லி மைதானத்தில் டெத் ஓவர்களை சிறப்பாக வீசி அந்த அணிக்கு நம்பிக்கை அளித்திருந்தார்.
அதை நம்பியே ஆர்சிபி இவரை ரூ.6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்திருக்கிறது. டெல்லி மைதானத்தை போலவே சின்னசாமி மைதானமும் சிறியது. எனவே அங்குள்ள பயன்படுத்திய அஸ்திரங்களை இங்கும் பயன்படுத்தி ஆர்சிபிக்கு விக்கெட் வேட்டை நடத்திக்கொடுக்க வேண்டும். இவர் கடந்தாண்டில் 8 இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.
IPL 2025 KKR vs RCB: லியம் லிவிங்ஸ்டன்
மிடில் ஆர்டரில் அதிரடி பேட்டிங், லெக் ஸ்பின் மற்றும் ஆப் ஸ்பின் போடும் பௌலிங் திறன் ஆகியவற்றை கொண்ட லியம் லிவிங்ஸ்டன் நிச்சயம் ஆர்சிபிக்கு பொக்கிஷம்தான். அவர் சிறப்பாக விளையாடினால் நிச்சயம் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசம் ஆகும். ஆனால், அவர் தொடர்ச்சியான பார்மில் இல்லை என்பதே கசப்பான உண்மையாகும்.
இருப்பினும், இவரது சிக்ஸ் ஹிட்டிங் திறனை அடிப்படையாக வைத்தே இவருக்கு ரூ.8.75 கோடியை ஆர்சிபி ஏலத்தில் கொட்டியிருக்கிறது. பஞ்சாப் இவருக்கு RTM கூட போடவில்லை எனலாம். 15வது ஓவருக்கு பின் இறங்கி பவுண்டரிகளை பறக்கவிட்டார் என்றால் ஆட்டம் வெறும் 2-3 பந்துகளிலேயே தலைகீழாக மாற வாய்ப்பிருக்கிறது.