ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்பு படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும் என்றும் உறுதிபட கூறினார்.
இந்தியாவில் நச்சலைட் ஆதிக்கம் மிகுந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஸ்கர் உள்ளது. இம்மாநிலத்தில் நக்சலைட் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் பாதுகாப்பு படைவீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்களுக்கு எதிரான இந்த தேடுதல் நடவடிக்கையின்போது, அவ்வப்போது பாதுகாப்பு படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டம், கங்கலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வனப் பகுதியில் மாநில காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் படை (டிஆர்எஃப்) மற்றும் மத்திய அரசின் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எஃப்) வீரர்கள் நேற்று காலை நக்சலைட்களை தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தண்டேவாடா மாவட்ட எல்லையை ஒட்டி அமைந்துள்ள இப்பகுதியில் காலை 7 மணி அளவில் கூட்டுப்படையினரை நோக்கி நக்சலைட்கள் துப்பாக்கியால் சுட்டனர். உடனே பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இரு தரப்பிலும் கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.
பல மணி நேரம் நீடித்த மோதலுக்கு பிறகு, சம்பவ இடத்தில் இருந்து 26 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக பஸ்தார் பிராந்திய ஐ.ஜி. சுந்தர்ராஜ் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘‘இந்த மோதலில் டிஆர்எஃப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிபொருட்கள் பெருமளவில் கைப்பற்றப்பட்டன’’ என்றார். இதுபோல, சத்தீஸ்கரின் கான்கெர் மாவட்டத்தில் நாராயண்பூர் எல்லையை ஒட்டிய வனப் பகுதியில் டிஆர்எஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் நேற்று காலையில் நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது கூட்டு படையினர் – நக்சலைட்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு கடும் மோதலுக்கு பிறகு 4 நக்சலைட்களின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், தானியங்கி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கான்கெர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்திரா கல்யாண் கூறினார். சத்தீஸ்கரில் இந்த ஆண்டில் பல்வேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் இதுவரை 113 நக்சலைட்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 97 பேர் பீஜப்பூர், கான்கெர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை கொண்ட பஸ்தார் பிராந்தியத்தில் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அமைப்பை சேர்ந்த பலரைகொன்றதன் மூலம் இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்றுவதற்கான பயணத்தில் பாதுகாப்பு படைகள் மற்றொரு பெரிய வெற்றியை பெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘நக்சலைட்களுக்கு இரக்கம் காட்டாத அணுகுமுறையுடன் மோடி அரசு முன்னேறி வருகிறது. சரண் அடைவது முதல் தேசிய நீரோட்டத்தில் இணைவது வரை அவர்களுக்கு அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படுகிறது. சரணடையாத நக்சலைட்களுக்கு எதிராக சிறிதும் சகிப்புத்தன்மை காட்டப்படாது. அதில் அரசு உறுதியாக உள்ளது. 2026 மார்ச் 31-ம் தேதிக்குள் நக்சலைட் இல்லாத நாடாக இந்தியா மாறும்’ என்று தெரிவித்துள்ளார்.
தேடுதல் வேட்டை தொடர்கிறது: சத்தீஸ்கர் துணை முதல்வர் விஜய் சர்மா கூறியதாவது: பீஜப்பூர் என்கவுன்ட்டரில் டிஆர்எஃப் வீரர் ராஜு ஒய்யாமி வீரமரணம் அடைந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஒட்டுமொத்த அரசும் துணை நிற்கும். இந்த துயரை தாங்கும் மன வலிமையை அவர்களுக்கு கடவுள் அளிக்கட்டும். பஸ்தார் பிராந்தியத்தில் உள்ள வீரர்கள் மற்றும் பீஜப்பூரில் உள்ள ஒட்டுமொத்த குழுவினரையும் வாழ்த்துகிறேன். இந்த வெற்றிக்கு நமது வீரர்களின் துணிச்சலும் வலிமையும்தான் காரணம். பீஜப்பூர் மற்றும் கார்கெர் மாவட்டத்தில் என்கவுன்ட்டர் நடைபெற்ற 2 இடங்களிலும் நக்சலைட்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.