திருநெல்வேலி: முதல்வர் திறந்துவைத்தும், மூடியே கிடக்கும் மாநகராட்சிப் பூங்கா – பயன்பாட்டுக்கு வருமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் நீர் பல்வேறு கால்வாய்கள் மூலம் ஏரிகள், குளங்கள் மற்றும் விவசாய பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இவற்றில் திருநெல்வேலி கால்வாயின் மூலம் நெல்லை நகரில் உள்ள நயினார் குளத்துக்கும் தண்ணீர் வரத்து உள்ளது.

இக்குளத்தில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதுடன், சுற்றுச்சூழலை அழகுபடுத்தவும் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, குளத்தின் கிழக்கு பகுதியில், அதாவது காய்கறி மார்க்கெட் அருகே, அழகிய நடைபாதை மற்றும் விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டன. எனினும், தற்போது அவை பயன்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன.

இதற்கிடையில், நயினார் குளத்தின் தெற்கு பகுதியில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி செலவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், அழகிய பூங்கா, நடைபாதைகள், நீருற்று, விளையாட்டு உபகரணங்கள், குடிநீர் வசதி, உணவக அறைகள், பாதுகாப்பு அறைகள், கழிப்பிட வசதி, வண்ண விளக்குகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பொது மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, கம்பிவேலி, தடுப்பு சுவர், நடைபாதைகளின் நடுவில் கூடுதல் வசதிகள் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி 6-ம் தேதி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த பூங்காவை திறந்து வைத்தார். ஆனால், இதுவரை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவில்லை. எனவே, இந்த வசதிகள் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, “நயினார் குலக்கரை பூங்கா கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும்” எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.