“திருப்பதி கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே பணி…” – ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு

திருப்பதி: திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும் என்றும், தற்போது பிற சமூகங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் அவர்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள் என்றும் ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தனது பேரனின் பிறந்தநாளை முன்னிட்டு குடும்பத்துடன் திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்குச் சென்ற முதல்வர் சந்திரபாபு நாயுடு, தரிசனத்துக்குப் பிறகு தரிகொண்டாவில் உள்ள வெங்கமாம்பா அன்னதான விடுதியில் ஒரு நாள் பிரசாதம் விநியோகத்துக்காக ரூ. 44 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். மேலும், குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து பக்தர்களுக்கு பிரசாதம் பரிமாறினார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திரபாபு நாயுடு, “திருமலை கோயிலில் இந்துக்கள் மட்டுமே பணியமர்த்தப்பட வேண்டும். தற்போது பிற மதங்களைச் சேர்ந்த நபர்கள் அங்கு பணிபுரிந்தால், அவர்களின் உணர்வுகளைப் புண்படுத்தாமல் வேறு இடங்களுக்கு மாற்றப்படுவார்கள். நாட்டின் அனைத்து மாநிலத் தலைநகரங்களிலும் வெங்கடேஸ்வர சுவாமி கோயில்கள் கட்டப்படும். வெளிநாடுகளிலும் வெங்கடேஸ்வர சுவாமியின் கோயில்கள் நிறுவப்பட வேண்டும் என பல பக்தர்கள் விரும்புகிறார்கள்.

ஏழு மலை பகுதிக்கு அருகில் வணிகமயமாக்கல் கூடாது. இந்தப் பகுதியை ஒட்டி மும்தாஜ் ஹோட்டலுக்கு முன்னர் அனுமதி வழங்கப்பட்டது. 35.32 ஏக்கர் நிலப்பரப்பில் கட்ட திட்டமிடப்பட்ட ஹோட்டலுக்கான ஒப்புதலை ரத்து செய்ய அரசாங்கம் இப்போது முடிவு செய்துள்ளது. ஹோட்டல் நிர்வாகம் சைவ உணவு மட்டுமே வழங்க முன்மொழிந்திருந்தாலும், இந்தப் பகுதியில் எந்தவொரு தனி நபருக்கும் அனுமதி வழங்கப்படாது என்று அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

24 கிளேமோர் கண்ணிவெடிகளால் நான் குறிவைக்கப்பட்டேன். அத்தகைய தாக்குதலில் இருந்து தப்பிப்பது சாத்தியமற்றது. ஆனால், நான் வெங்கடேஸ்வரரின் தெய்வீக அருளால் மட்டுமே உயிர் பிழைத்தேன். இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பில் இருந்து நான் தப்பித்தேன் என்பது இறைவனின் மகத்தான சக்தியை நிரூபிக்கிறது” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.