ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 46 வயது பெண் ஆன்மிகப் பயணமாக கடந்த ஜனவரி மாதம் திருவண்ணாமலைக்கு வந்தார். தனியார் ஆசிரமம் ஒன்றில் தங்கி தியான பயிற்சி மேற்கொண்டுவந்தார். இந்த நிலையில், திருவண்ணாமலை கோபுரத் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவன் கைடாக (சுற்றுலா வழிகாட்டி) ஃபிரான்ஸ் பெண்ணிடம் அறிமுகமானார். பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சுற்றி காண்பித்துவந்த வெங்கடேசன், சமீபத்தில் மலை மீது ஏறி தியானம் செய்ய அழைத்துச் சென்றார். மலை மீது சென்றதும், அந்தப் பெண் தியானத்தில் அமர்ந்துள்ளார். அப்போது, கஞ்சா புகைத்த வெங்கடேசன் மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டிருக்கிறார்.
அதன் பிறகு மலையில் இருந்து கீழே இறங்கியதும் பாதிக்கப்பட்ட பெண் தனது தூதரக அலுவலகத்துக்கு தகவல் கொடுத்து கதறி அழுதார். அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி அலுவலகத்துக்கு புகார் பகிரப்பட்டது.

இதையடுத்து, திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று ஃபிரான்ஸ் பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து சுற்றுலா வழிகாட்டி வெங்கடேசனையும் கைது செய்தனர். இதற்கிடையே, வெங்கடேசன் தப்பிஓட முயன்றபோது வழுக்கி விழுந்ததில் இடது காலில் முறிவு ஏற்பட்டது. போலீஸார் மாவுக்கட்டு போட்டு சிகிச்சையில் அனுமதித்திருக்கின்றனர். இதற்கு முன்பு வேறு ஏதேனும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறாரா எனவும் வெங்கடேசனிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். ஃபிரான்ஸ் பெண்ணுக்கு நேர்ந்த இந்த கொடூர பாலியல் சம்பவம், திருவண்ணாமலைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடமும் பேரதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.