மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக எம்பிக்கள் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பங்கேற்றனர்.
நாடாளுமன்றத்தின் மக்களவை, மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியது. அப்போது மக்களவையில், தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள், ஆங்கிலத்தில் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட வெள்ளை நிற டி ஷர்ட் அணிந்து பங்கேற்றனர்.
“நியாயமான தொகுதி மறுவரையறை வேண்டும். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும்” என்ற கண்டன வாசகங்கள் திமுக எம்பிக்களின் டி ஷர்ட்டில் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டு இருந்தன.
இதற்கு மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கடும் ஆட்சேபம் தெரிவித்தார். அவர் கூறும்போது, “விதிகள், பாரம்பரிய நடைமுறைகளின்படி மக்களவை நடத்தப்படுகிறது. அவையின் மாண்பை எம்பிக்கள் காப்பாற்ற வேண்டும். வாசகங்களுடன்கூடிய டி ஷர்ட் அணிவது அவை விதிகளுக்கு எதிரானது. முறையான ஆடைகளை அணிந்து அவைக்கு வரலாம்” என்று தெரிவித்தார். டி ஷர்ட் விவகாரம் தொடர்பாக மதியம் 12 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மதியம் 12 மணிக்கு அவை மீண்டும் கூடியபோதும் திமுக எம்பிக்கள் அதே டி ஷர்ட் அணிந்து அவைக்கு வந்தனர். இதனால் மக்களவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு அவை கூடியபோதும் திமுக எம்பிக்கள் டி ஷர்டை மாற்றவில்லை. இதன்காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவை ஒத்திவைப்பு: மக்களவையை போன்றே மாநிலங்களவையிலும் கண்டன வாசகங்கள் அச்சிடப்பட்ட டி ஷர்ட் அணிந்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிக்கள் பங்கேற்றனர். இதற்கு அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆட்சேபம் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மதியம் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மதியம் 12 மணிக்கு அவை கூடியதும் திமுக எம்பிக்கள் அதே டி ஷர்ட் அணிந்திருந்தனர். இதனால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலிலும் திமுக எம்பிக்கள் டி ஷர்ட்டை மாற்றவில்லை. இதைத் தொடர்ந்து மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டம்: மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்ற திமுக எம்பி கனிமொழி கூறும்போது, “பல்வேறு கட்சிகளின் எம்பிக்கள் வாசகங்கள் அடங்கிய ஆடைகளுடன் அவையில் பங்கேற்று உள்ளனர். அப்போது எவ்வித ஆட்சேபமும் எழுப்பப்படவில்லை. தற்போது நாங்கள் எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வாசகங்கள் அடங்கிய டி ஷர்ட் அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. புதிய விதியை கூறுகிறார்கள்” என்று தெரிவித்தார்.
திமுக எம்பி திருச்சி சிவா கூறும்போது, “மக்களவை தொகுதி மறுவரையறை காரணமாக தமிழ்நாடு உட்பட 7 மாநிலங்கள் பாதிக்கப்படும். இந்த பிரச்சினையை வலியுறுத்தி நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். எங்களது பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு இதுவரை உரிய விளக்கம் அளிக்கவில்லை. எனவே எங்களது போராட்டத்தை தொடர்கிறோம்” என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: பஞ்சாபில் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சாட்டி காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுதொடர்பாக அவர்கள் கூறும்போது, “பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இணைந்து விவசாயிகள் மீது தாக்குதல் நடத்துகின்றனர். பஞ்சாபில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை மிகவும் வன்மையாக கண்டிக்கிறோம். விவசாயிகளுக்காக நாங்கள் போராடுவோம்” என்று தெரிவித்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பஞ்சாபை சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.