சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் மாநிலங்களுக்கு தற்போதுள்ள விகிதாச்சாரத்தை மாற்றக் கூடாது என்று சிபிஎம் மூத்த தலைவர் பிருந்தா காரத் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் எடுத்த முயற்சியை நாங்கள் ஆதரிக்கிறோம். இது ஒரு முக்கியமான மற்றும் குறிப்பிடத்தக்க நடவடிக்கை. சிபிஎம்-ன் கேரள முதல்வர் இந்த கூட்டத்தில் பங்கேற்பார்.
இது இடங்கள் மற்றும் எண்ணிக்கையைப் பற்றியது மட்டுமல்ல, ஜனநாயகத்தின் அம்சத்துடனும் ஆழமாக இணைக்கப்பட்டுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். தொகுதி மறுவரையறை என்பது மக்கள் தொகை அடிப்படையில் ஏற்படுத்தப்படுமானால், அது மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய குறிப்பாக, மக்கள் தாங்களாக முன்வந்து மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அது தண்டனையாக அமையும்.
மாநிலத்தின் வளர்ச்சி காரணமாகவே, மக்கள் தொகை குறைப்பு சாத்தியமாகி உள்ளது. மாற்றுக் கொள்கைகளின் காரணமாக விரைவான வளர்ச்சிக்கு வழிவகுத்த மாநிலங்களையும் மாநில மக்களின் குரலையும் நீங்கள் தண்டிக்கப் போகிறீர்கள் என்றால், அது நியாயமற்றது. நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்குமான பிரதிநிதித்துவத்துக்கும் ஒரு விகிதாச்சாரம் இருக்கிறது. அது தொடர வேண்டும். அந்த விகிதாச்சாரத்தை நீங்கள் மாற்ற முடியாது என்று நாங்கள் நம்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள தொகுதி மறுவரையறை கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை வந்துள்ளார். அவரை, திமுக எம்பிக்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் வாசிக்க>> தொகுதி மறுவரையறை பேசுபொருளாகியது ஏன்? – வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்