உத்தர பிரதேச அரசுதான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் என லோனி தொகுதி பாஜக எம்எல்ஏ-வான நந்தகிஷோர் குர்ஜார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து பேசிய குர்ஜார், “உத்தர பிரதேசத்தின் தலைமைச் செயலாளர்தான் நாட்டிலேயே ஊழல் மிகுந்த அதிகாரி. அவர் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மூளையை வசியப்படுத்தி வைத்திருக்கிறார். அயோத்தி நிலத்தை உ.பி. அதிகாரிகள் சுரண்டுகின்றனர். மாநிலத்தில் அதிகமான பசுக்கள் கொல்லப்படுகின்றன. போலி என்கவுன்ட்டர்களில் பொதுமக்கள் கொல்லப்படுவதும் அதிகரித்து வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை அதிகாரிகள் தவறான தகவல்களின் மூலம் திசை திருப்புகின்றனர்” என்றார்.
முன்னதாக உ.பி.யின் லோனி தொகுதியில் அனுமதியின்றி ராம் கைலாஷ் யாத்திரை நடத்த நந்தகிஷோர் குர்ஜார் முயன்றதாக போலீஸார் கூறுகின்றனர். ஆனால் இந்த யாத்திரை பாரம்பரியமாக நடைபெற்று வருவதால் கடந்த ஆண்டு வரை இதற்கு அனுமதி பெற்றதில்லை என்று குர்ஜார் தெரிவித்துள்ளார். ஆளும் பாஜக அரசு மீது அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவரே குற்றச்சாட்டு வைத்திருப்பது அக்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.