புதுடெல்லி: பெண்ணின் மார்பகங்களை பிடிப்பது, ஆடையை இழுப்பது பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமை முயற்சி ஆகாது என்ற அலகாபாத் உயர் நீதின்றத்தின் தீர்ப்பு குறித்து மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும், இது தவறான தீர்ப்பு என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “இது மிகவும் தவறான முடிவு, நான் இம்முடிவை ஆதரிக்கவில்லை. நாகரிகமான சமூகத்தில் இத்தகைய முடிவுகளுக்கு இடமில்லை. இந்தத் தீர்ப்பு சமூகத்தில் தவறான பாதிப்பை ஏற்படுத்தும். அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த முடிவில் உச்ச நீதிமன்றம் தலையிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
சிறுமி ஒருவரை இரண்டு ஆண்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் இவ்வாறு சாடியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டட்ட இரண்டு பேரும் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவரின் மார்பகங்களைப் பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் சிறுமி அணிந்திருந்த பைஜாமாவினை இழுத்து அவரை சாலையில் உள்ள பாலம் ஒன்றின் கீழேத் தள்ள முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த சிலரின் தலையீட்டால் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.
விசாரணை நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 376 மற்றும் போக்சோ சட்டம் பிரிவு 18-ஐ மேற்கோள் காட்டி இது சிறுமி மீதான திட்டமிட்ட பாலியல் வன்கொடுமை என்று தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாடியிருந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள், இந்த வழக்கு திட்டமிட்ட பாலியல் வன்கொடுமையாக ஆகாது. இது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 354, 354 – பி மற்றும் அதற்கு இணையான போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழே வரும் என்று வாதிட்டனர்.
அதனை ஏற்றுக்கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றி மார்பகங்களைப் பிடித்தல் பாலியல் வன்கொடுமையாகாது என்று தீர்ப்பளித்தார்.