பெண்களுக்கு நிதி உதவி வழங்கும் மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன? – இணை அமைச்சர் விளக்கம்

புதுடெல்லி: பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் செயல்படுத்தி வருவதாக பெண்கள் மற்றும் குழந்தை நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சாவித்ரி தாக்கூர் அளித்த பதில்: “மகளிர் தொழில்முனைவோர்களை வளர்க்க அரசு பல்வேறு முன்முயற்சிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்டார்ட்-அப் இந்தியா திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 1,57,066 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களில் 73,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், குறைந்தது ஒரு பெண் இயக்குநரைக் கொண்டு இயங்கி வருகின்றன.

பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் துறைகள் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றன. பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இத்திட்டம் பெண்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. இதேபோல், பெண்களுக்கான தென்னை நார் திட்டமும் பெண்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது.

ஸ்டாண்ட்-அப் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா மற்றும் முத்ரா கடனுதவி திட்டங்கள் ஆகியவை பெண் தொழில்முனைவோருக்கு பெருமளவில் பயனளித்து வருகின்றன. இவை மட்டுமின்றி, மேலும் பல திட்டங்கள் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

காப்புரிமை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களில் குறைந்தபட்சம் ஒருவர் பெண்ணாக இருக்கும்போது, அவர்களின் கோரிக்கை ​​விரைவாக எடுத்துக்கொள்ளப்படும் வகையில் இந்திய காப்புரிமைச் சட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பெண் கண்டுபிடிப்பாளர்கள் காப்புரிமை விண்ணப்பங்களை தாக்கல் செய்யவும், அவர்களின் கண்டுபிடிப்புகளைப் பாதுகாக்கவும் ஊக்குவிக்கும் ஒரு ஒருங்கிணைந்த முயற்சி இது.

தங்கள் அறிவுசார் சொத்துரிமையைப் பாதுகாக்க விண்ணப்பிக்கும் பெண் தொழில்முனைவோர்க்கு, மற்ற பெரிய நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த கட்டணமே விதிக்கப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பெண்களின் காப்புரிமை தாக்கல் 905% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் புதுமைகளை வளர்க்கும் அடல் இன்னோவேஷன் மிஷனின் அடல் இன்குபேஷன் மையங்களின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் ஸ்டார்ட்-அப்களில் மூன்றில் ஒரு பங்கை பெண்கள் வழிநடத்துகின்றனர்.

பண்ணை அல்லாத துறைகளில் நுண் நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் சுய வேலைவாய்ப்புகளைப் பெறும் பெண்களுக்கு மாநியத்துடன் கடன் வழங்கும் திட்டமான பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநரையாவது கொண்டிருக்க வேண்டும் என்று 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தில் அரசாங்கம் விதிகளை உருவாக்கியுள்ளது. தெருவோர விற்பனையாளர்களுக்கான பிரதமரின் நிதி திட்டம் (PM SWANidhi) போன்ற திட்டங்கள் தெருவோர விற்பனையாளர்களுக்கு கடன் வசதிகளை வழங்குகின்றன. இந்தத் திட்டங்களின் கீழ் பெரும்பாலான பயனாளிகள் பெண்களே.

இவை மட்டுமின்றி, பெண் தொழில்முனைவோரை ஆதரிப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளால் பல முயற்சிகள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பெண் உதயம் நிதி திட்டம்(Mahila Udyam Nidhi Yojana), தேனா சக்தி திட்டம்(Dena Shakti Scheme), பெண் தொழில்முனைவோருக்கான ஸ்ட்ரீ சக்தி தொகுப்பு(Stree Shakti Package for Women Entrepreneurs) மற்றும் சென்ட் கல்யாணி திட்டம் (Cent Kalyani Scheme) போன்ற திட்டங்களும் பெண்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.