“மறுமணம் பண்ணிருக்கலாமேன்னு அம்மாவை இப்பவும் திட்டுவேன்!'' – `மைனா' சூசன் பேட்டி

திருமணமாகப்போகும் ஆண்கள், திருமணம் ஆன ஆண்கள் ரியல் லைஃபில் எதிர்கொள்ளப்போகும்; எதிர்கொள்ளும் பிரச்னையை மையப்படுத்திய எதிர்மறை கதாப்பாத்திரத்தால்… இப்போதும் மிரட்டிக்கொண்டிஇருப்பவர் வைத்துக்கொண்டிருப்பவர், ‘மைனா’ பட ‘எப்போ வர்றீங்க?’ சூசன் தான்.

பார்வையே ஆளை அட்ரஸ் இல்லாமல் ஆக்கிவிடும். படம் முழுக்கவே மிரளவைத்திருப்பார். மனைவிகளிடமிருந்து கணவர்களுக்கு போன் கால் வந்தாலே, “எப்போ வர்றீங்க?” என்ற காமெடியைத்தான் இப்போதும் சொல்லி கிண்டலடித்துக்கொண்டிருக்கிறார்கள், அலுவலக சகாக்கள். இப்போதும் மீம்ஸ்களில் வெறித்தனமாக வலம் வந்து ட்ரெண்டிங்கில் இருக்கும், ‘எப்போ வர்றீங்க?’ சூசன் ஜார்ஜிடம் எப்படி இருக்கீங்க? என நலம் விசாரித்தபடி பேசினேன். “ரொம்ப நல்லாருக்கேன்” என்றபடி ‘மைனா’ நினைவுகளுடன் உற்சாகமாக பேசுகிறார் சூசன் ஜார்ஜ்.

“நான் நடிகை ஆவேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. இன்ஜினீயரிங் முடிச்சுட்டு டி.எல்.எஃ.ப் கம்பெனியில ஒர்க் பண்ணிக்கிட்டிருந்தேன். அப்போதான், பார்ட் டைமா சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். ‘தென்றல்’ சீரியல் எல்லாம் எனக்கு நல்ல பேர் வாங்கிக்கொடுத்துச்சு. விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் நடிச்சுட்டிருக்கும்போதுதான் ‘மைனா’ பட வாய்ப்பு வந்தது. சீரியலில் என்னோட குரு ரமணன் சாரும் பிரம்மா சாரும்தான். அவங்க இல்லைன்னா நான் இல்ல.

மைனா சூசன்

அவங்கதான் ‘கிடைச்ச வாய்ப்பை மிஸ் பண்ணாத’ன்னு என்கரேஜ் பண்ணி அனுப்பி வெச்சாங்க. முதல்ல ஆடிஷன் வெச்சாங்க. சீரியலில் நடிச்சிட்டிருந்ததால, என்னை ஓரளவுக்கு மக்களுக்கு தெரியும். போகும்போதே, இயக்குநர் பிரபு சாலமன் சார், ‘உங்களுக்கு நெகட்டிவ் ரோல்தான்’ன்னு சொல்லிட்டார். ஆல்ரெடி நடிக்கத் தெரிஞ்ச எனக்கு ஆடிஷன்லாம் வைக்கிறாங்களேன்னு கோபப்பட்டேன். ஆடிஷனுக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ண வெச்சுட்டாங்க.

எனக்கு இன்னும் கோபம் அதிகமாகிடுச்சு. அதுக்கப்புறம்தான், ‘அதெல்லாம் எனக்கு தேவையில்ல. எப்போ வருவீங்க? அப்படிங்குற டயலாக்கை கொடுத்து, மூணு மாடுலேஷன்ல பேசச்சொன்னாங்க. நான், ஏற்கெனவே வெயிட் பண்ண வெச்சதால, அவங்க மேல பெருங்கோபத்துல இருந்தேன். அதே கோபத்தோடு அந்த டயலாக்கை பேசினேன். அது, அப்படியே நேச்சுரலா வந்துடுச்சு. நாங்க எதிர்பார்த்தமாதிரியே ரொம்ப சரியா பண்ணிட்டீங்கன்னு பாராட்டினாங்க. இப்படித்தான் ‘மைனா’ படத்துக்கு செலெக்ட் ஆனேன்.

மத்தபடி, பிரபு சாலமன் சார் ரொம்ப ஸ்வீட் பர்சன். ஷூட்டிங் ஸ்பாட்டுல ரொம்ப அமைதியா; எளிமையா இருப்பார். என்ன தேவையோ அதை மட்டும்தான் பேசுவார். ஒர்க் முடிஞ்சதும் போய்க்கிட்டே இருக்கலாம். அதேநேரம், ஷுட்டிங்லேயே மறக்க முடியாதவர் யார்ன்னா, எனக்கு கணவரா நடிச்ச சேது சார்தான். ‘மைனா’ படம்தான், அவருக்கு முதல் படம். அது ஆடியன்ஸுக்கு தெரியாத அளவுக்கு ரொம்ப சூப்பரா, இயல்பா நடிச்சிருப்பார். க்ளைமாக்ஸ் காட்சியில என்னை வெட்டுற சீன். பெரிய அரிவாளை அவர் கையில கொடுத்துட்டாங்க. என்னை பார்த்துதான் வெட்டணும். கொஞ்சம் மிஸ் ஆனாலும் என்மேல உண்மையாக கத்தி பட்டுடும். அந்த சீன் நிறைய டேக் போயிடுச்சு. ‘அய்யய்யோ… கையில அரிவாளை கொடுத்துட்டாங்களே. உண்மையிலேயே பட்டுடுமோ’ன்னு பயந்துக்கிட்டேதான் நின்னேன். அப்புறம், ஒருவழியா அந்த காட்சியை சரியா பண்ணி முடிச்சுட்டார். படம் ரிலீஸ் ஆகி எனக்கு பெரிய பாராட்டு கிடைச்சது. கூடவே, மக்கள்கிட்டேயிருந்து திட்டும் கிடைச்சது.

மைனா

‘மைனா’, ரிலீஸ் ஆனப்போ நான் வீட்டை விட்டே வெளியில வரல. அப்படியிருந்தும், படம் பார்க்குற எக்ஸைட்மெண்டுல தியேட்டருக்கு போனேன். படம் ஓடிக்கிட்டிருக்கும்போதே கெட்ட வார்த்தையில திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அவர், என்னை ஒரு வெட்டுதான் வெட்டுவார். ஆனா, படம் பார்த்த ஆடியன்ஸ் “விடாதய்யா, அவளை கண்டம் துண்டமா வெட்டி, வெட்டி போடுன்னு வார்த்தைகளாலேயே என்னை வெட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அது எல்லாமே என்னோட சினிமா வாழ்க்கையில ரியலா நடந்த த்ரில்லிங்கான காட்சிகள்.

‘மைனா’ வெளியாகி 15 வருடங்கள் ஆகுது. அந்தத் திட்டு மட்டும் நின்னபாடு கிடையாது. இப்போ வரைக்கும் நான் அந்த படத்துல கேட்குற “எப்போ வர்றீங்க?” காட்சியை திட்டி திட்டியே ரசிச்சுக்கிட்டே இருக்காங்க. அதுபற்றி பேசாத இடமே இல்ல. பொண்ணு பார்க்குற இடத்துல, கல்யாண மண்டபத்துல, ஆஃபிஸுல இதே டயலாக்கை பேசி கிண்டல் அடிச்சுக்கிறாங்க. மீம்ஸ்களா இப்போதும் வந்து குவிஞ்சுக்கிட்டே இருக்கு. அது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ, மீண்டும் பிரபு சாலமன் சார் இயக்கத்தில் ‘கும்கி 2’ படத்துல நடிச்சிக்கிட்டிருக்கேன். ‘முதல் மரியாதை’ பட வடிவுக்கரசி அம்மா மாதிரியான ரோல் அது. ரொம்ப பேசப்படும். இன்னும் 4 படங்களில் நடிச்சுக்கிட்டிருக்கேன். விரைவில் திரையில பார்ப்பீங்க.

மைனா

இந்த மூஞ்சுக்கு நெகட்டிவ் ரோல்தான் அமையுது. அப்படி இருந்தாலும் நான் அதை ரொம்ப பெர்ஃபெக்ட்டா பண்ணுவேன்” என்றவரிடம், “வேற வழியில்ல இந்த கேள்வியை உங்கக்கிட்ட கேட்டுத்தான் ஆகணும். நிஜ வாழ்க்கையில உங்க கணவர் வெளியில போயிருந்தார்ன்னா என்ன செய்வீங்க? அவர்க்கிட்ட எப்படி நடந்துக்குவீங்க?” என்று கேட்டபோது, சிரித்தவர்,

“நிஜத்துல நான் ரொம்ப சாஃப்ட். ரொம்ப அன்பான பொண்ணு. என் உலகமே அம்மா, கணவர், மகன்தான். அதுவும் எங்கம்மா சிங்கிள் பேரன்ட்டா இருந்து எங்களை வளர்த்தாங்க. அம்மாவோட இளம் வயதிலேயே, அப்பா ஆக்ஸிடெண்டுல இறந்துட்டார்.

அம்மா நினைச்சிருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணியிருக்கலாம். ஆனா, எனக்காவே அவங்க கல்யாணம் பண்ணிக்கல. இப்பவும் எங்கம்மாவை திட்டுவேன். ‘ஏம்மா, கல்யாணம் பண்ணிருந்திருக்கலாமேம்மா’ன்னு சொல்லிக்கிட்டே இருப்பேன். அதுக்கு அவங்க ‘உங்களைவிட எனக்கு யாரும் முக்கியம் இல்லை’ன்னு சொல்வாங்க.

என்னையும் அண்ணனையும் படிக்கவைக்கிறதுக்காக, ஒவ்வொருத்தர்க்கிட்டயா போயி கடன் கேட்டு நிற்பாங்க. அதெல்லாம், ரொம்ப கஷ்டமா இருக்கும். அம்மா பிரைவேட் நர்ஸா இருந்தாங்க. வெளிநாட்டு வேலைல்லாம் கிடைச்சது. ஆனா, எங்களை விட்டு போகக்கூடாதுன்னு தவிர்த்துட்டாங்க. அப்படிப்பட்ட அம்மாவை நல்லா பார்த்துக்கணும்ங்குறதுதான் என்னோட வாழ்நாள் லட்சியம். பெத்தவங்களை கடைசிவரைக்கும் நல்லபடியா பார்த்துக்கிறது பிள்ளைகளோட கடமை. இதை நான் ஒரு கோரிக்கையாகவே வைக்கிறேன்.

மைனா சூசன்

அதேமாதிரி, என்னோட மாமனார், மாமியார் ரொம்ப தங்கமானவங்க. ஷூட்டிங்ல பிஸியா இருந்தாலும் சாப்பாடு நினைச்ச நேரத்துக்கு கொடுத்தனுப்பிடுவாங்க. என்னோட கணவர், ஒரு ஐ.டி கம்பெனியில பெரிய பொறுப்புல இருக்கார். குடும்பத்தோட இப்போ பெங்களூர்ல இருக்கோம். முக்கியமா, எங்களுக்காக ஓய்வே இல்லாம உழைச்ச எங்கம்மாவை என்கூடவே கூப்ட்டுக்கிட்டு போய்ட்டேன். அவங்களை கடைசிவரைக்கும் ஒரு மகளா நல்லா பாத்துக்கணும். அதுமட்டும்தான், என்னோட விருப்பம்; கனவு எல்லாமே.

மற்றபடி, படத்துல பண்ற மாதிரில்லாம் என் கணவருக்கு போன் பண்ணமாட்டேன். அதேநேரத்துல, கோபம் எல்லாம் படமாட்டேன்லாம் பொய் சொல்லமாட்டேன். நியாயமான விஷயத்துக்கு கண்டிப்பா கோபப்படுவேன். என் பையன் ஒன்பதாவது படிக்கிறான். அவன்கூட விளையாடிக்கிட்டிருப்பேன். அவனே, மெச்சூரான பொண்ணா நடந்துக்கம்மான்னு சொல்வான். அந்தளவுக்கு, என் பையன்கூட சின்னப்புள்ள மாதிரி விளையாடிக்கிட்டிருப்பேன்.

சூசன்

அதுதான், எனக்கு சந்தோஷம்” என்கிறவர், அதேநேரத்துல உண்மையாகவே தன்னோட கணவனுடன் டைம் ஸ்பெண்ட் பண்ணனும்னு நினைக்கிற பெண்களை இந்த டயலாக்கை சொல்லி புண்படுத்தக்கூடாது. மனைவி எப்போ வர்றீங்க? என கேட்பது அன்பின் அடையாளம். காதலின் வெளிப்பாடு. அது எல்லை மீறும்போதுதான், சிக்கலாக மாறிவிடுகிறது” என்கிறார் அட்வைஸாக.

வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் – Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.