லக்னோ,
உத்தர பிரதேச மாநிலம் விருந்தாவன் பகுதியில் உள்ள சன்ராக் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா பாபு. இவர் பல ஆண்டுகளாக குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குடல் அழற்சி பாதிப்பிற்கான அறுவை சிகிச்சையை எவ்வாறு செய்ய வேண்டும் என யூடியூப் வீடியோக்களில் ராஜா பாபு தேடி பார்த்துள்ளார். பின்னர் அவற்றைப் பார்த்து தனக்கு தானே அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
அறுவை சிகிச்சைக்கு தேவையான கத்தி, ஊசி உள்ளிட்ட பொருட்களை மார்க்கெட்டில் இருந்து ராஜா பாபு வாங்கியுள்ளார். மேலும் அறுவை சிகிச்சை செய்துவிட்டு 11 தையல்கள் போட்டுள்ளார்.
ஆனால் அதன் பிறகு அவரது உடல்நிலை மோசமடைய தொடங்கியது. இதையடுத்து ராஜா பாபுவின் உறவினர்கள் அவரை உடனடியாக விருந்தாவன் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து மேல்சிகிச்சைகாக ஆக்ராவில் உள்ள மருத்துவமனையில் ராஜா பாபு அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.