ரவிச்சந்திரன் அஷ்வின் பெயரில் சாலை.. சென்னை மாநகராட்சி முடிவு

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் தனது சுழலால் பல சாதனைகளை செய்து இருக்கிறார். குறிப்பாக சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் எடுத்த பட்டியலில் உலக அளவில் 8வது இடத்திலும், இந்திய அளவில் 2வது இடத்திலும் இருக்கிறார். இந்தியாவை பொறுத்தவரை முதல் இடத்தில் அனில் கும்பிளே உள்ளார். அவர் 619 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். 

ரவிச்சந்திரன் அஷ்வின் சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட உள்ளார். இந்த நிலையில், கேரம் பால் ஈவண்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் தலைமை செயல்பாட்டு அலுவலர் கார்த்திக் மனு ஒன்றை அளித்தார்.

 மேலும் படிங்க: ஐபிஎல் 2025ல் வரப்போகும் இரண்டாவது பந்து விதிமுறை – இனி சேஸிஸ் ஈஸியா இருக்காது

அதில், “சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட் விளையாட்டில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாட்டிற்காகவும், மாநிலத்திற்காகவும் பல விருதுகளை வென்றுள்ளார். அஸ்வின் உலகின் சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டவர் என்றும், அஸ்வின் நமது மாநிலமான தமிழகத்தை சேர்ந்தவர் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். அஸ்வின் தமிழ்நாட்டிற்கு ஆற்றிய சேவைகளை அங்கீகரிக்கும் வகையில், ஆர்யா கவுடா சாலை அல்லது ராமகிருஷ்ணாபுரம் 1வது தெரு ஆகிய ஒரு தெருவிற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் சாலை என பெயர் மாற்றம் செய்யுமாறு” கோரிக்கை விடுத்தார்.

அதனை கருத்தில் கொண்டு ராமகிருஷ்ணாபுரம் 1வது தெருவிற்கு ‘ரவிச்சந்திரன் அஷ்வின் சாலை’ என பெயர் மாற்றம் செய்வதற்கு தீர்மானம் நிறைவேற்றிட மாமன்றத்தின் முன் ஒப்புதலுக்காக அனுமதி வேண்டி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அந்த சாலைக்கு அதிகாரப்பூர்வமாக பெயர் மாற்றம் செய்து அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்திய அணியின் மூன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 537 விக்கெட்களை எடுத்ததோடு 3503 ரன்களையும் சேர்த்துள்ளார். இதில் 6 சதங்கள் மற்றும் 14 அரை சதங்கள் அடங்கும். அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 116 போட்டிகளில் 156 விக்கெட்களையும் 65 டி20 போட்டிகளில் 72 விக்கெட்களையும் அவர் வீழ்த்தி இருக்கிறார். தற்போது ரவிச்சந்திரன் அஷ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாட உள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு அஷ்வின் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிங்க: IPL 2025 : இந்த ஆண்டு பிளே ஆஃப் செல்லும் நான்கு அணிகள், சிஎஸ்கே போகாது – டிவில்லியர்ஸ் கணிப்பு

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.