ராணுவத்துக்கு ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன பீரங்கிகள் வாங்க பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய ராணுவம் நவீனப்படுத்தப்பட்டு வருகிறது. ராணுவத்தில் தற்போது 105 மற்றும் 130 எம்எம் ரக பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவற்றுக்கு மாற்றாக 155 எம்எம் ரக பீரங்கிகள் (ஏடிஏஜிஸ்) வாங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஏற்கெனவே ஒப்புதல் வழங்கியிருந்தது. இந்நிலையில் இதற்கு பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறைக்கான அமைச்சரவை குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 307 நவீன பீரங்கிகள், அதை இழுத்துச் செல்வதற்கு 327 வாகனங்களும் வாங்கப்படும். இந்த பீரங்கிகள் சீனா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதிகளுக்கு அனுப்பப்படும். இந்த பீரங்கிகள் மூலம் துல்லிய தாக்குதலை நடத்தி மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்த முடியும். இதனால் இந்த பீரங்கிகள் இந்திய ராணுவத்தின் வலிமை மேலும் அதிகரிக்கும். இந்த பீரங்கிகள் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சியில் தயாரிக்கிறது. இதன் தயாரிப்பில் 65 சதவீத பாகங்கள் உள்நாட்டில் தயாரிக்கப்படும் பாகங்கள். அதனால் இந்த கொள்முதல் உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்குவிப்பாக இருக்கும்.