எந்தவொரு புதிய தொழில்நுட்பத்தையும் சினிமா துறைதான் மிக வேகமாக உள்வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளும். அந்த வகையில் இப்போது அசுர வளர்ச்சியடைந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தையும் சினிமா துறைதான் மிக வேகமாக உள்வாங்கி மிகப்பெரிய அளவில் பயன்படுத்தத் தயாராகி நிற்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்தி முழு திரைப்படத்தையும் உருவாக்கிவிடும் அளவிற்கு பல செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர்கள் புதிதுபுதிதாக வந்துகொண்டிருக்கின்றன. ஸ்கிரிப்ட் எழுதுவதில் ஆரம்பித்து படத்தை இயக்கி, உருவாக்கி, அதை விளம்பரம் செய்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை ஒரு முழு திரைப்படத்தின் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு எப்படியெல்லாம் பயன்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம் வாங்க…

கதை, திரைக்கதை எழுதுவதை சரிபார்க்க, அதனை இன்னும் மேம்படுத்திப் புதிய புதிய ஐடியாக்களைப் பரிந்துரை செய்ய பல செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டிருக்கின்றன. இவை கதை மற்றும் திரைக்கதையில் இருக்கும் பிழைகளை சுட்டிக்காட்டுவது, எழுதப்பட்டக் கதை இதற்கு முன் திரைப்படங்களாக வந்திருக்கின்றதா, கதையை இன்னும் எப்படி சுவாரஸ்யமாக்கலாம், இன்றைய ரசிகர்களுக்கு இது பிடிக்குமா, அதன் பட்ஜெட் எவ்வளவு ஆகும், எந்த நடிகரைத் தேர்வு செய்தால் நன்றாக இருக்கும் என நிறைய விதமான பரிந்துரைகளை இந்த செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர்கள் தருகின்றன. ஒரு நாவலை திரைக்கதையாக மாற்றித் தரவும் செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாக நம்பி, கதை மற்றும் திரைக்கதையை அதுவே பார்த்துக் கொள்ளும் என்பதில்லை, வேலையை இன்னும் திறம்படச் செய்வதில் இந்த சாஃப்ட்வேர்கள் பெரும் பங்காற்றுகின்றன.
கதை மற்றும் திரைக்கதை எழுதப் பயன்படுத்தப்படும் சில பிரபலமான சாஃப்ட்வேர்கள்:
ScriptBook, Logan, Cinelytic, Final Draft, Celtx, Jasper AI, Plot Generator, Table Reading, Katalist, Story Work
செயற்கை நுண்ணறிவு மூலம் கதை, திரைக்கதையைக் கொண்டு அனிமேஷனாக, ஸ்டோரி போர்டாக ஒரு முழு படத்தையும் முன்னோட்டப் பார்வைக்காக உருவாக்கிவிடலாம். கதாப்பாத்திரங்களை உணர்வு – உயிரோட்டத்துடன் உருவாக்கிவிடலாம். அதை வைத்தே அதில் பொருந்திப்போகும் நடிகர்களையும் செயற்கை நுண்ணறிவு பரிந்துரை செய்துவிடுகிறது. அதற்கான சரியான லோகேஷன்களையும் சமூக வலைதளங்கள், இணையத்தில் இருக்கும் வீடியோக்களை ஆராய்ந்து பரிந்துரை செய்துவிடுகிறது.

படத்தை உருவாக்குவதில் தேவைப்படும் முன் தயாரிப்புப் பணிகளைப் பற்றியும், அதற்கு தேவையான விஷயங்கள், அதற்கு எவ்வளவு பட்ஜெட்டாகும் என்பதையும் இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் பரிந்துரை செய்துவிடுகின்றன. எந்த வகை கேமராக்கள் தேவைப்படும் எனும் அளவிற்கு இவை சொல்லிவிடுகின்றன.
சில பிரபலமான சாஃப்ட்வேர்கள்:
Shot Lister, FrameForge, StoryBoard Pro, Storyboarder, Celtx, Previs Pro, Shot Designer, Blender, Ftrack Studio, D-ID, Cuebric, Maverick
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி காட்சிகளை கச்சிதமான வரிகளில் தெளிவாக எழுதினாலே, அதைக் கொண்டு VFX, CGI காட்சிகளை உருவாக்கிவிடலாம். டப்பிங்கில் நடிகர்களின் உதடு அசைவுகளை மாற்றுவதில் ஆரம்பித்து, நடிகர்களை ‘VFX’ -யில் உயிரோட்டத்துடன் உருவாக்கும் அளவிற்கு செயல்திறனைக் கொண்டுள்ளன இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள். நடிகர்களின் வயதைக் குறைப்பது, முகங்களை மாற்றி அமைப்பது என பல வேலைகளை திறன் மிகுந்ததாகச் செய்து முடித்துவிடுகின்றன.

கதாப்பத்திரங்களை உருவாக்குவது, அதற்கு உயிரோட்டம் கொடுத்து, உணர்வுகளைக் கொண்டுவருவது, காட்சிக்குத் தேவையான முழு VFX, CGI வேலைகளை செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர்கள் மூலமே செய்திடலாம். தெளிவாக எழுத்தில் கொடுத்தாலே, எல்லாவற்றையும் காட்சிகளாக மாற்றித் தந்துவிடும். படைப்பாளிகள், இயக்குநர்களின் எவ்வளவு பெரிய கனவுகளுக்கும், கற்பனைக்கும் உயிர்க் கொடுத்து, திரைப்படமாக உருவாக்கிவிடலாம் எனும் பெரும் நம்பிக்கையை இந்த வகை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் தந்துவிடுகின்றன. படைப்பாளிகளின் கற்பனைகளை இவை எல்லைகளற்றதாக இன்னும் விரிவாக்குகின்றன.
VFX, CGI உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் சில சாஃப்ட்வேர்கள்:
Sora, Runway, Disney’s FaceDirector, Nuke, Ziva VFX, DeepMotion, Autodesk Maya, Adobe Sensei, NVIDIA GauGAN, Synthesia, DeepBrain,
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் படத்தொகுப்பு வேலைகளில் மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது. மேனுவலாக செய்யும் பல வேலைகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் மிக எளிதாக மாற்றிக் கொடுத்து வருகின்றன. தேவையில்லாத காட்சிகள், சரியாகப் படமாக்கப்படாத காட்சிகள், கதை சொல்லலின் ரிதத்திற்குப் பொருந்தாத காட்சிகள், சுவாரஸ்யமற்ற காட்சிகளை ஆராய்ந்து கண்டுபிடித்து நீக்குவதற்குப் பரிந்துரை செய்கின்றன. தேவையற்ற பிழை நிறைந்த காட்சிகளை தேடித் தேடி நேரத்தை வீணடிப்பதைக் குறைத்து, வேலையை இன்னும் துரிதமாக்க இவை பெரும் உதவியாக இருக்கின்றன. ஒரு முழுப்படத்தின் காட்சிகளையும் ஆராய்ந்து, ஒவ்வொரு காட்சிக்கும் தேவையான கலர் கிரேடிங் பரிந்துரைகளையும் கச்சிதமாகச் செய்துத் தருகின்றன இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள்.
Adobe Premiere Pro, DaVinci Resolve, Avid Media Composer உள்ளிட்ட எடிட்டிங் சாஃப்ட்வேர்களில் நாளுக்கு நாள் பல புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் வந்த வண்ணமிருக்கின்றன. பல மணிநேரங்கள், பல நாள்கள் செய்யும் வேலைகளை இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் துரிதமாக்கிவிடுகின்றன.

செயற்கை நுண்ணறிவு மூலம் எந்தப் பாடகரின் குரலிலும் ஒரு பாடலையே உருவாக்கிவிடலாம் என்பது இன்று ட்ரெண்டிங்காக இருக்கும் தொழில்நுட்பம்தான். அதைத்தாண்டி படத்தின் கதை, காட்சிகளை ‘TEXT’ வடிவத்தில் டைப் செய்தாலே அதற்கான பாடல் வரிகளை உருவாக்கி விடலாம். செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தரும் பாடல் வரிகளை தேவைக்கேற்றபடி மாற்றி அமைத்து திரைப்படத்திற்குத் தேவையான பாடலை செய்துவிடலாம். பாடலுக்கேற்ற பல டியூன்களையும் அதுவே பரிந்துரை செய்துவிடுகிறது. பாடல் வரிகளுக்கேற்ப பின்னணி இசைக்கான உள்ளீடுகளை, ஐடியாக்களை கூடுதலாகச் சொன்னால் பின்னணி இசைகளையும் உருவாக்கிவிடுகின்றன. செயற்கை நுண்ணறிவு தருவதை ஒரு முன்னோட்ட மாடலாக வைத்துக் கொண்டு கவிஞர்கள், இசையமைப்பாளர்கள் கொஞ்சம் மேம்படுத்தினாலே பல வேலைகளை எளிதாக்கி, துரிதமாகப் பாடல்களை உருவாக்கிவிடலாம்.
இசை மற்றும் பாடல் உருவாக்கத்தில் சில பிரபலமான செயற்கை நுண்ணறிவு சாஃப்ட்வேர்கள்:
Amper Music, AIVA, Landr, LyricStudio, Jarvis, Suno, Vocaloid, SoundDraw, Musicfy, Mubert Ai, Loudly, Boomy
பிரபலமாக இருக்கும் பல முன்னணி ஓடிடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித் தங்களின் சப்ஸ்கிரைபர்ஸ் எந்தப் பகுதிகளில், எந்த மாநிலங்களில் அதிகமாக இருக்கின்றனர். அவர்கள் எந்தவிதமான திரைப்படங்களை அதிகம் பார்க்கின்றனர், எந்த மாநிலத்தவர்கள் எப்படிப்பட்ட படங்களை விரும்புகிறார்கள் என்ற தகவல்களை சேகரிக்கின்றன. அந்த டிஜிட்டல் தகவல்களையும், இணையதளம், சமூக வலைதள தகவல்களை வைத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் எந்த மாநிலத்தில் எப்படியான திரைப்படங்கள் ஓடுகின்றன என்பதை சொல்லிவிடுகின்றன. செயற்கை நுண்ணறிவின் இந்தப் பரிந்துரைகளை வைத்து பல ஓடிடி நிறுவனங்கள் வெப்சீரிஸ், திரைப்படங்களைத் தயாரிக்கின்றன.
திரைப்பட விளம்பரங்களை சமூக வலைதளம், யூடியூப் மூலம் எப்படியெல்லாம் கொண்டு சேர்க்கலாம் என்ற வியூகங்களையும், விளம்பர போஸ்டர்களை உருவாக்கி, அதை வைரலாக்குவதிலும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் பெரும் உதவியாக இருக்கின்றன.
திரைப்பட புரோமோஷன்களில் சில Ai சாப்ட்வேர்கள்:
Cinelytic, Movio, Gower Street Analytics, Comscore Movies, FilmTrack, Tarantula AI, Jinni, Flick AI.

இப்படியாக கதை எழுதத் தொடங்குவது முதல் படத்தை விளம்பரப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் அசுரத்தனமாக வளர்ந்து வருகின்றன. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எல்லாம் இப்போது ஆரம்ப நிலையில்தான் இருக்கின்றன. எதிர்காலத்தில் இவையெல்லாம் மேலும் மேலும் வளர்ந்து சினிமா மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளில் பல வேலைகளை எளிதாக்கவும், துரிதமாக்கவும் தயாராக இருக்கின்றன.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் படைப்பாளர்களை விழுங்கி, தின்று தீர்த்துவிடுமா என்று கேட்டால், அது நிச்சயமாக இல்லை. செயற்கை நுண்ணறிவு என்பது 100 உதவியாளர்களுக்குச் சமம். பல உதவியாளர்கள் செய்யும் வேலையை, பல மணிநேரம் தேடி கண்டுபிடித்துச் செய்யும் வேலையை, கற்பனையை கண் முன் கொண்டு வரும், பெரும் வேலைகளை எளிதாகச் செய்து முடிக்க உதவும் அவ்வளவே.
டிஜிட்டல் கேமராக்கள் சினிமாவை எல்லோருக்குமானதாக மாற்றியது. யார் வேண்டுமானாலும் சினிமா எடுக்கலாம் என்ற நிலையைக் கொண்டு வந்து சினிமாவை ஜனநாயகப்படுத்தி, எளிமைப்படுத்தியது. அதுபோல இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமும் எல்லோருக்குமானதாக மாறினால் சினிமா இன்னும் எளிமையாக, திறன் மிகுந்ததாக, குறைந்த பொருட்ச் செலவில் VFX, CGI காட்சிகளை சாத்தியமாக்கும் எல்லோருக்குமான சினிமாவாக மாறும். எல்லாவற்றிலும் நிறை – குறைகள் இருப்பதுபோல இந்தச் செயற்கை தொழில்நுட்பத்திலும் பல நிறை – குறைகள் இருக்கின்றன. எந்தவொரு தொழில்நுட்பத்தையும் சரியாகப் பயன்படுத்தினாலே ஆபத்துகளைத் தவிர்த்துவிடலாம்.

இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் எல்லாம் கட்டளைகளின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. அந்தக் கட்டளைகளை போடும் படைப்பாளர்களே என்றும் முதன்மையானவர்கள். படைப்பாளர்களின் கற்பனையை செயலாக்க, வேலைகளைச் செயல் திறன் மிகுந்ததாகவும், துரிதமாகவும் செய்வதற்கே இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுகின்றன. அவற்றால் ஒருபோதும் படைப்பாளர்களை விழுங்கிவிடமுடியாது.