`ஏய் ஜொர்தாலயே உர்ட்டாதே… தொர்ட்டா தூக்கினு தொரத்தாத’ பாடல் மூலம் பிரபலமானவர் ராப் பாடகர் வசந்தகுமார் என்னும் அசல் கோலார்.
லியோ படத்தில் ‘நா ரெடி தான்…’ பாடலில் ராப் பாடி திரைத்துறையில் பிரபலமாகி ‘யார்ரா அந்த பையன்.. நான்தான் அந்தப் பையன்..’, ‘என்ன சண்டைக்குக் கூப்டா..’ உள்ளிட்ட பாடல்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார் இவர். நேற்று (மார்ச்20) திடீரென செய்தியாளர்களைச் சந்தித்திருக்கும் அசல் கோலார், தனது மலேசிய நண்பரை குடியுரிமை அதிகாரிகள் கீழ்த்தரமாக நடத்தியதாகவும், கஞ்சா வைச்சிருக்கியா என்று மிரட்டியதாகவும் புகார் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அசல் கோலார், “மலேசிய சிட்டிசனான என் நண்பர் கடந்த ரெண்டு மாதமாக இங்க சென்னையில் தங்கியிருக்கார். இவர் டூரிஸ்ட் விசாவில வந்திருக்கார். டூரிஸ்ட் விசா எக்ஸ்பைரியாகப் போறப்போ, அவர் நாட்டுல இருந்து டூரிஸ்ட் விசாவ ரெனிவல் பன்னியிருக்கார். ஆனால், எங்களுக்கு இன்னைக்குத்தான் தெரியும் டூரிஸ்ட் விசாவ எக்ஸ்டண்ட் பன்னமுடியாதுனு.
அதுக்காக என் நண்பர் பல அலுவலங்களுக்கு அலைந்து முயற்சி செய்தார். இன்னைக்கு கடைசியாக குடியுரிமை அலுவலகம் வந்த போது குடியுரிமை அதிகாரிகள்கிட்ட இதப் பற்றி கேட்டபோது, எங்க தங்கி இருக்குறனு கேட்டாங்க. அதுக்கு ‘என் கூட என் வீட்டுலதான் தங்கி இருக்கார்’னு சொன்னேன். இங்க எனக்கு நண்பர்கள் இருக்குறாங்க என்றார் என் நண்பர். அவர்கள் எடக்கு முடக்காக கேள்விகேட்டு வாக்குவாதமானது.

அதில் குடியுரிமை அதிகாரிகள் என் நண்பரை ரூம் உள்ளே அழைத்துபோய் துன்புறுத்தி இருக்கிறார்கள். கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறார். எல்லா ஆவணங்களையும் தந்த பிறகு இரண்டு நாள்களுக்குள் எல்லாம் சரி பண்ணிதருகிறோம் என்கிறார்கள். ஆனால் அதுக்குள்ள என் நண்பர அடித்து, துன்புறித்தி, ‘கஞ்சா வச்சிருக்கியா’ என்றெல்லாம் கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறை எங்களுக்கு உதவியது. ஆனால், மத்திய அரசு அதிகாரிகள் ஏன் இப்படி இருக்கிறார்கள். நான் பிரபலமாக இருக்கவும், செய்தியாளர்கள் உதவியுடன் இந்தப் பிரச்னையை எதிர்கொண்டேன். ஆனால், சாமனிய மக்கள் எல்லாம் என்ன செய்வார்கள்” என்று புகார் தெரிவித்து பேசியிருக்கிறார்.